Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 24 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நல்லாட்சியை உறுதிப்படுத்தும் வகையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கட்டாய இடமாற்றம் வழங்குவது காலத்தின் தேவையாகும் என்று கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம், கிழக்கு மாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தினால் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணம் கடந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தின்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிழக்கு மாகாணம் வடமாகாணத்தோடு இணைந்திருந்த காலத்தில் மாகாண கல்வி அமைச்சில் தமிழ்மொழிமூல செயலாளர்களே நியமிக்கப்பட்டு; வந்துள்ளனர்.
ஆனால், கிழக்கு மாகாணம் தனியாக பிரிக்கப்பட்டதன் பின்பு, கிழக்கு மாகாணத்தின் நிர்வாக கட்டமைப்பு பெரும்பான்மை சமூகத்திடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில் கல்வியமைச்சின் செயலாளர்களும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்துவந்துள்ளனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விப் புலம் சார்ந்தவர்கள் ஆகிய எல்லோரும் தமிழ்மொழி மூலமானவர்களாக காணப்படும் நிலையில், பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை செயலாளராக நியமிப்பதென்பது வேதனைக்குரியதாகும்.
மேலும், கல்வித்துறையில் அனுபவமற்ற அல்லது கல்வி நிர்வாகம் சாராத ஒருவர் நியமிக்கப்படும்போது கல்வித்துறையில் மோசடிகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காணப்படுவதோடு, அதிபர்கள், ஆசிரியர்கள் பழிவாங்கப்படும் செயற்பாடுகளும் கிழக்கு மாகாண கல்வியமைச்சில் இடம்பெறுகின்றன. ஆகவே, கல்வி நிர்வாக சேவையை சேர்ந்த ஒருவரே செயலாளராக நியமிக்கப்படவேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.
தற்போதைய கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் கடந்த ஆளுநரின் பதவிக் காலத்திலும் அவரது தான்றோன்றித்தனமான நிர்வாகத்துக்கு ஒத்தாசை வழங்கியவராவார்.
தற்போதைய நல்லாட்சியின் கீழ் புதிய ஆளுநர் நியமிக்கப்படடுள்ளபோதும், முன்னாள் ஆளுநரின் விசுவாசிகள் அதே சிந்தனையிலேயே செயற்படுகின்றனர். எனவே, நல்லாட்சியின் பலாபலன்களை அடைந்துகொள்ளும் வண்ணம் முன்னாள் ஆளுநரின் விசுவாசிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்படவேண்டும். இவர்கள் இடமாற்றம் செய்யப்படாதவிடத்து, நல்லாட்சியின் பயனை கிழக்கு மாகாண மக்கள் அனுபவிப்பதென்பது கானல் நீராகவே மாயத் தோற்றமாகி விடும்.
மேலும், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவை பொறுத்தவரையில் செயலாளர் மற்றும் உதவிச் செயலாளர் ஆகியோர் பொரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தோர் என்பதோடு, தமிழ்மொழி அறவே தெரியாதோரும் கூட. இந்நிலையில் அதிபர், ஆசிரியர்கள் ஏனைய திணைக்களங்களைச் சேர்ந்த தமிழ்மொழிமூல மானவர்கள் சேவையை பெற்றுக்கொள்வதில் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே, பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக தமிழ்மொழி மூலமான ஒருவரை நியமிப்பதே சாலச்சிறந்ததாகும்.
கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் தேசிய மாகாணப் பாடசாலைகளின் வளப்பகிர்வு எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்பவற்றுக்கு முகங்கொடுத்து, அவற்றைச் சீர்செய்யும் பொறுப்பு மாகாண கல்விப் பணிப்பாளரையே சார்ந்ததாக காணப்படுகின்றது.
இதன் நிமித்தம் வாகனங்களை பயன்படுத்துவதற்கான அனுமதி கல்வியமைச்சின் செயலாளரிடமிருந்தே பெறப்படுவது வழக்கமாக இருந்தபோதும், மாகாண கல்விப் பணிப்பாளரைத்தான் தரிசித்த பாடசாலை அதிபர்களிடமிருந்து வரவுச் சான்றிதழ் பெற்றுத் தமக்குச் சமர்ப்பிக்கும்படி கல்வியமைச்சின் செயலாளர் கோருவது, என்பது பணிப்பாளரின் சிறப்புரிமையை மீறும் செயலாக அமைந்துள்ளதோடு, அது மாகாணக் கல்விப் பணிப்பாளரை அவமதிக்கும் செயலாகவே நாம் கருதுகின்றோம். எனவே செயலாளரின் அத்துமீறல் செயற்பாடு தொடருமேயானால், கிழக்கு மாகாணத்தின் கல்வி படுமோசமான நிலைக்குத் தள்ளப்படுமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே, கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளரை, கிழக்கு மாகாணத்துக்கு வெளியே இடமாற்றம் செய்வது காலத்தின் தேவையாகும்.
நல்லாட்சியை உறுதிப்படுத்தக்கூடிய சிறந்த நிர்வாக ஆற்றல் கொண்ட புதிய ஆளுநர் கிழக்கு மாகாணத்துக்கு கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால், முன்னாள் ஆளுநரின் விசுவாசிகள் இடமாற்றம் செய்யப்படாமை, ஊழல் மோசடிகளுக்கும் பழிவாங்கல் செயற்பாடுகளுக்கும் மேலும் வழிவகுத்திருக்கின்றது. கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசின் ஊடான நல்லாட்சி கிழக்கு மாகாணத்தில் இன, மத பேதமின்றி சகல மக்களையும் சென்றடைய வேண்டியது அவசியமாகும். ஆகவே முன்னாள் ஆளுநரின் அடாவடித்தனங்களுக்கு ஒத்தூதிய செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மாகாணத்துக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதோடு அதற்கான தார்மீகப் பொறுப்பும் தற்போதய ஆளுநருக்கே உரியதாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர், கிழக்கு மாகாணப் பிரதம செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago