2025 மே 17, சனிக்கிழமை

மாணவியின் கொலையை கண்டித்தும் நீதி வேண்டியும் ஆர்ப்பாட்டங்கள்

Suganthini Ratnam   / 2015 மே 21 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித்,எஸ்.சபேசன்

யாழ். புங்குடுதீவில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகட்ச தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டுமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மட்டக்களப்பு காவியா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது,  இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகட்ச தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்டுமாறு கோரப்பட்டது.  பின்னர் இங்கிருந்து  சென்ற பேரணியாக சென்றவர்கள்  மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.

இந்தப் பேரணியில்  மட்டக்களப்பு சிவில் பாதுகாப்புக்குழு, மண்முனை வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கம், கிராம மட்ட சிறுவர் பாதுகாப்புக்குழுக்களின் அங்கத்தவர்கள்  கலந்துகொண்டனர்.

இதேவேளை, இந்த மாணவியின் கொலையை கண்டித்து மட்டக்களப்பு  மாவட்ட பெண்கள் வலையமைப்பான சமாசம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இந்த  மாணவியின்  கொலையை  கண்டித்து வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக நுழைவாயில் முன்றலில் ஒன்றுகூடிய  மாணவர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாணவியின் கொலையை  கண்டித்து காத்தான்குடியில் முஸ்லிம் பெண்கள் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளரும், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சா தலைமையில் அதன் அலுவலகத்துக்கு முன்பாக நடைபெற்றது.

இது இவ்வாறிருக்க, இந்த மாணவியின் கொலையை கண்டித்தும் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குமாறு கோரியும்  பட்டிருப்புக் கல்வி வலயத்துக்குட்பட்ட 14ஆம் கிராமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்பாக அப்பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .