2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

2/3 பெரும்பான்மையுடன் திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்படும்: பொருளதார அபிவிருத்தி பிரதியமைச்சர்

Super User   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

இன்னும் சில தினங்களில் திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என பொருளதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு திவிநெகும சட்டமூலம் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போதே பொருளதார அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வாழச்சேனையிலுள்ள பேத்தாளை குகணேசன் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய பிரதி அமைச்சர்,

"திவிநெகும திணைக்கள சட்ட மூலம் இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும். நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் வருவது மக்களுக்கு உதவுவதற்காகவும் மக்களின் நலனை கவனிப்பதற்காகவுமே ஆகும்.

அந்த வகையில் மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த திவிநெகும சட்டமூலம் நாடாளுமன்றதில் நிறைவேற்றப்படும். இலங்கையின் வரலாற்றில் வறுமையை ஒழிப்பதற்கு திணைக்களமொன்று ஆரம்பிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும்.

வறுமையை ஒழித்து ஒவ்வொரு தனி நபரையும் வறுமையிலிருந்து மீட்டு பொருளாதார ரீதியாக மேம்படுத்தவே இந்த திவிநெகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் கிராமத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற காரணமாக அமைகின்றது.

திவிநெகும திணைக்களம் உருவாக்கப்படுவதன் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலம் வாய்ந்தவர்களாக மாறுகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அரசாங்க நிரந்தர ஓய்வூதிய உத்தியோகத்தர்களாக மாறுகின்றனர்.
சமுர்த்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வரும் சமுர்த்தி வங்கிகள் மற்றும் சமுர்த்தி மகா சங்கம் என்பன சட்ட ரீதியான அந்தஸ்த்தை இந்த திவிநெகும திட்டத்தின் மூலம் பெறுகின்றன.

சமுர்த்தி வங்கிகள் மத்திய வங்கியின் கீழ் சட்ட ரீதியான அந்தஸ்த்தை இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்கின்றன. இதன்மூலம் அதிகளவான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். சமுர்த்தி அதிகார சபையும் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படுவதால் சமுர்த்தி அதிகார சபையும் இந்த திவிநெகும திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றது. இந்த வகையில் ஒரு அதிகார சபை திணைக்களமாக மாற்றப்படுகின்ற  முதல் சந்தர்ப்பமும் இதுவாகும்.

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடந்த பல வருடங்களாக தங்களை ஓய்வூதியத்திற்குள் உள்வாங்கி நிரந்தர அரச உத்தியோகத்தர்களாக மாற்றுங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சமுர்த்தி உத்தியோகத்தர்களை கைவிடவில்லை. அவர்களை நிரந்தர உத்தியோகத்தர்களாக இந்த திட்டத்தின் மூலம் மாற்றி அவர்களை ஓய்வூதியம் பெறுகின்ற உத்தியோகத்தரர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆக்கியுள்ளார். திவிநெகும சட்டமூலத்தின் 28ஆவது சரத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களை பற்றியே சொல்லப்பட்டுள்ளது" என்றார்.

இந்த கூட்டத்தில் சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார பணி;பபாளர் எம்.நடேசராசா, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .