Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
டொக்டர் ச.முருகானந்தன்
கடந்த நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில் இனங்காணப்பட்ட, கிலிகொள்ள வைத்த கொடிய நோய், எயிட்ஸ் ஆகும். 1980களில், உயிரைக் காவுகொண்ட இந்த நோய், ஆரம்பத்தில் எதனால் ஏற்படுகின்றது, எவ்வாறு பரவுகின்றது என்பதை, மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க முன்னரே, ஆபிரிக்க நாடுகளில் லட்சோபலட்சம் மக்கள் உயிரிழந்தனர். இதனால், உலகை அழிக்கும் ஒரு நோய் தோன்றிவிட்டதாகப் பலரும் அஞ்சினர்.
இந்தக் கொடிய நோயை ஏற்படுத்துவது ஒரு வைரஸ் என்பதும், இது மனித உடலிலுள்ள நோயெதிர்ப்புச் சக்தியை அழிக்கின்றது என்பதும் மருத்துவர்களின் அயராத முயற்சியினால் பின்னர், அறியப்பட்டது.
இந்த வைரஸுக்கு, Human Immuno Supresent virus (HIV) எனப் பெயரிட்டார்கள். தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின்மூலம் இந்த நோய், எச்.ஐ.வி.தொற்றினால் ஏற்படுகின்ற நோய் எனக் கண்டறிந்தார்கள். எச்.ஐ.வி தொற்றினால் ஏற்படுகின்ற நோய்க்கு, ‘எயிட்ஸ்’ என்று பெயரிட்டார்கள். AIDS (ACQUIRER Immuno Suppresent Disease Syndrome). தமிழில் இதை, ‘நிர்ப்பீடன குறைபாட்டு நோய் குணம்குறிகள்’ என்று அழைப்பார்கள்.
தொற்று ஏற்பட்டதும், எச்.ஐ.வி கிருமி இரத்தத்திலுள்ள நோயெதிர்ப்புக் கலங்களுடன் போரிடுகின்றது. படிப்படியாக இக்கிருமி பெருகி, நோயெதிர்ப்புக் கலங்களை அழித்தபடி இருக்கும். ஒரு கட்டத்தில், இக்கிருமியின் அளவுக்கதிகமான பெருக்கத்தினால், நோயாளியின் நிர்ப்பீடனம் எயிட்ஸ் நோய் வெளிப்படுகிறது. எச்.ஐ.வி தொற்றானது, இரத்தத்தில் பெருகி, ஸ்கலிதம், யோனித் திரவம், நிணநீர், தாய்ப்பால் என்பவற்றுக்கும் செல்கின்றது.
நோய் பரவும் முறை
பிரதானமாக பாலுறவின் போதே இந்தக் கிருமி, தொற்றுள்ளவரிடமிருந்து சுகதேகிக்குச் செல்கிறது. இரத்த தானம், தாய்ப்பாலூட்டல் என்பவற்றின் மூலமும் தொற்றலாம். ஊசிகளை மருந்தேற்றுபவர்கள் பகிர்ந்து கொள்ளும்போதும் தொற்று ஏற்படலாம். தாம்பத்திய உறவின்போது, மாத்திரமன்றி குதவழி உறவு, வாய்வழி பாலுறவு என்பவற்றாலும் நோய்த் தொற்று ஏற்படலாம், எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவரின் பாலுறுப்பில் எதுவித மாற்றமும் தெரிவதில்லை. தொற்று ஏற்பட்ட ஒருவர், நோயாளியாக மாறும் வரையிலான காலப்பகுதியில், சுகதேகியாக இருப்பினும் எச்.ஐ.வி. கிருமியைப் பிறருக்குத் தொற்றவைப்பார். இது அவருக்கோ, அவரோடு உறவு வைத்துள்ளவருக்கோ தெரியாதிருக்கும். இதுவே, ஆபத்தான காலம். சாதாரணமாக நோய் அரும்பு காலம் சில மாதங்களிலிருந்து பல வருடங்கள் வரை செல்லலாம்.
எயிட்ஸ் நோய் வெளிக்கண்ட பின்னர் பலவிதமான தொற்று நோய்களால் பீடித்திருப்பதால், ஒரு சில மாதங்களிலேயே எச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள் இறந்துவிடுவார்கள் என்பதால், இவர்களிடமிருந்து பாலுறவு எச்.ஐ.வி தொற்றுவது குறைவு. தற்போது, எச்.ஐ.வி தொற்றுப் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் பரவலாக ஏற்பட்டுள்ளமையால் பிறவழிகளில் தொற்றுவதும் குறைவு.
எமது நாட்டின் சுகாதார நிலை மேம்பட்டிருப்பதனாலும், சுகாதார அறிவு பரவலாக உள்ளமையினாலும் ஆரம்பகாலம் தொட்டே, எச்.ஐ.வி குறைந்த மட்டத்திலேயே இருந்து வருகின்றது. வருடம் ஒன்றுக்கு 300 பேருக்குள்ளான, புதிய தொற்றாளர்கள் கண்டறியப்படுவதனால், பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் எச்.ஐ.வி. தொற்றியுள்ளவர்கள் இலங்கையில் குறைவாகவே உள்ளனர். எனினும், வருடாவருடம் இனங்காணப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு இருக்கின்றமையால், எச்.ஐ.வி தொற்றுப் பற்றி நாம் மிகவும் உசாராக இருக்க வேண்டும்.
எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதைத் தடுக்க சமூக மட்டத்தில், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு, இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எயிட்ஸ் நோய்க்கு, முழுமையாகச் சிகிச்சையளித்து குணமாக்க இதுவரை உறுதியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும், எச்.ஐ.வி தொற்றைத் தடுக்க, தடுப்பு மருந்து இல்லை என்பதையும், எயிட்ஸ் நோய் ஏற்பட்டால் மரணம் நிச்சயம் என்பதையும் எடுத்துரைக்க வேண்டும்.
நோய் தொற்றும் முறைகள் பற்றியும், தொற்றைத் தவிர்க்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும். நம்பிக்கைக்கு, உரிய ஒருவருடன் மட்டுமே தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். வேறு உறவுகளைத் தவிர்க்க முடியாதபோது, பாதுகாப்பான தாம்பத்திய உறவு (ஆணுறை அணிந்து) கொள்ள வேண்டுமென்பதை, வலியுறுத்த வேண்டும்.
ஊசிகள் மூலமாக, இரத்ததானம் மூலமோ தொற்றாத அளவுக்கு நாட்டில் சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இரத்ததானம் பெற முன்னர், குருதியில் எச்.ஐ.வி தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இரத்தம் பெறப்படுகின்றது. ஊசிகளைப் பொறுத்தவரையில் ஒரு தடவை பாவித்து விட்டு வீசும் ஊசிகளே பாவிக்கப்படுகின்றன. எனினும், இது பற்றிய அறிவூட்டல் அனைவருக்கும் அவசியம்.
எச்.ஐ.வி தொற்றாளர் குழந்தை பெறாமல் இருப்பது சிறந்தது. கருத்தரிக்கும் பட்சத்தில் உரிய கண்காணிப்புடன் பிரசவ காலம்வரை மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கருவில் உள்ள போதோ பிரசவத்தின் போதோ தொற்று ஏற்படும் சாத்தியம் உண்டு. பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள தாய்மார் பாலூட்டக்கூடாது. பாலின் ஊடாகவும் எச்.ஐ.வி கிருமி தொற்றலாம் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.
எச்.ஐ.வி. தொற்றின் அறிகுறிகள்
எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவருக்கு, பெரிதான அறிகுறிகள் தென்படுவதில்லை. சாதாரண வைரஸ் தொற்றினால் ஏற்படும் அறிகுறிகள், தலைவலி, தேக உழைவு, லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் சிலருக்கு ஏற்படலாம். அது விரைவிலேயே குணமாகிவிடும். எச்.ஐ.வி தொற்றுள்ள ஒருவரை இரத்த பரிசோதனை மூலம், அதுவும் தொற்று ஏற்பட்டு மூன்று மாதங்களின் பின்னரே இதைக் காணமுடியும். இவர்களது பாலுறுப்புகளிலோ அல்லது இதர உறுப்புகளிலோ எதுவித அறிகுறிகளும் புலப்படுவதில்லை.
எச்.ஐ.வி தொற்று நீண்ட நோயரும்பு காலத்தின் பின்னரே, எயிட்ஸ் நோயாக வெளிப்படும். இவர்களில், தோற்றொற்று, நிமோனியா, காசநோய், வயிற்றோட்டம் என பல்வேறு தொற்றுகளும் அடிக்கடி ஏற்படும். தொற்று நோய்கள் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாமையால் குணமாக மாட்டாது. விரைவிலேயே, மரணத்தை ஏற்படுத்தும். எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்களில் புற்றுநோய் ஏற்படலாம்.
எச்.ஐ.வி. தொற்று உள்ளவர் திருமணம் செய்யலாமா?
எச்.ஐ.வி தொற்று உள்ளவர், தொற்று இல்லாத ஒருவரைத் திருமணம் செய்தால் அத்தொற்று அப்பாவியான துணைக்குத் தொற்றிவிடும். மூடி மறைத்து திருமணம் செய்வது பாவம். எனினும், எச்.ஐ.வி தொற்றுள்ளவர், இன்னொரு தொற்றுள்ளவரைத் திருமணம் செய்யலாம். மரணம் நிச்சயம் எப்பொழுதும் சம்பவிக்கலாம் என்பதை அறிந்துகொண்டு திருமணம் புரிய வேண்டும். திருமணம் செய்துகொண்டாலும் குழந்தைகளைப் பெறக்கூடாது. பிறக்கப்போகும் குழந்தைக்கு கருவிலோ அல்லது பிரசவத்தின்போதோ அல்லது குழந்தை பிறந்த பின்னர் பாலூட்டினாலோ தொற்று ஏற்படலாம். பிறக்கும்போதே எச்.ஐ.வி தொற்று என்பது எவ்வளவு கொடுமையானது!
இலங்கையில் பரவுகின்ற எச்.ஐ.வி. தொற்று, பெரும்பாலும் பாலுறவினாலேயே ஏற்படுகின்றது என்பதால், எயிட்ஸ் இல்லாத நாடாக இலங்கையை மாற்றிட கட்டுப்பாடான, பாதுகாப்பான உறவே சிறந்தது. இதரவழியிலான தொற்றுக்கள் பற்றியும் அறிந்து அவதானமாக இருக்க வேண்டும்.
10 minute ago
36 minute ago
39 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
36 minute ago
39 minute ago
49 minute ago