Kogilavani / 2021 மே 05 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரசாயன உரப் பயன்பாடு தடை செய்யப்பட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென, நேற்று (04) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் முன்மொழிந்தார்.
இந்தத் தடை உத்தரவால், ஏனைய துறைகள் எதிர்நோக்கும் பாதிப்பை விட, தேயிலைத் தொழிற்றுறையே பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனால், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலைநாட்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவ்வாறு இடம்பெறுமாயின், ஆயிரம் ரூபாய் நாள் சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டது பயனற்றதாகிவிடும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
“இரசாயன உரங்களைத் தேயிலைத் தோட்டங்களுக்கு போடும் பட்சத்திலேயே, அதிகளவு தேயிலைக் கொழுந்துகள் துளிர்விடத் தொடங்கும். அவ்வாறு கொழுந்து அதிகமாகக் காணப்படுவதால், தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பையும் எவ்வித மாற்றமுமின்றி வழங்கக்கூடியதாக இருக்கும். அத்துடன், ஒரு நாளைக்கு அவர்கள் பறிக்கவேண்டிய தேயிலைக் கொழுந்தின் அளவையும் நாள்தோறும் பறிக்கக்கூடியதாக இருக்கும்” என்றும், செந்தில் தொண்டமான் எடுத்துரைத்துள்ளார்.
“மாறாக, இயற்கை உரத்தைப் பயன்படுத்தினால், இயற்கை உரம் பயன்பாட்டுக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளவே, நான்கு ஆண்டுகளாகும். அத்துடன், கொழுந்து விளைச்சலும் மிகக் குறைவாகவே காணப்படும். அவ்வாறு விளைச்சல் குறைவாகக் காணப்படும் பட்டசத்தில், தேயிலைத் தோட்டங்களைப் பராமரிப்பதில், பெருந்தோட்ட நிறுவனங்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதகமாகவும் அமைந்துவிடும்.
“அது தவிர, இயற்கை உரத்தில் விளைச்சல் செய்யப்படும் தேயிலையின் விலை, தற்போது பெற்றுக்கொள்ளும் சாதாரண தேயிலையின் விலையை விட மூன்று மடங்கு அதிகமாகும். இதனால் எதிர்காலத்தில், சாதாரண மக்கள் தேயிலைப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இவ்வாறிருக்கும் பட்சத்தில், அரசாங்கத்தின் இரசாயன உரம் தொடர்பான தீர்மானம், தேயிலைத் தோட்டச் செய்கைக்கு ஏற்றதாக இருக்காது” என்று, செந்தில் தொண்டமான் கூறியுள்ளதுடன், இது விடயத்தில் ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முடிவில், தேயிலைத் தோட்டங்களின் உற்பத்தி மாத்திரமன்றி, மலையக மக்களின் வாழ்வாதாரமும் அடங்கியிருக்கிறது என்றும் எடுத்துரைத்துள்ள அவர், இதனால் இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் நல்லதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago