Sudharshini / 2016 ஜூலை 28 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
மலேரியா நோயினை இலங்கையிலிருந்து முழுமையாக அகற்றியுள்ளோம். கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு மலேரியா நோயினால் பீடிக்கப்பட்ட எந்தவொரு நபரும் இலங்கையில் இனங்காணப்படவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். மலேரியா நோய் இல்லாத நாடாக இலங்கை இருப்பதனால், அதற்குரிய சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம், எமக்கு விரைவில் வழங்கவுள்ளது என டாக்டர் சாலிய அமரசிங்க தெரிவித்தார்.
மலேரியா நோய் தடுப்புப்பிரிவு பதுளைப் பிராந்திய அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பதுளைப் பிராந்திய பணிப்பாளர் சாலிய அமரசிங்க கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து அவர் பேசுகையில், 'கடந்த 2012ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் முதல் இதுவரையில் இலங்கையில் உள்ளவர்கள் எவரும் மலேரியா நோயினால் பீடிக்கப்படவில்லை. இதுவிடயம், உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு நாம் அறிவித்துள்ளோம். மூன்று வருடங்களுக்கு மலேரியா நோய் பீடிக்கப்படாமலிருக்கும் பட்சத்தில் அதற்கான உறுதி சான்றிதழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படல் வேண்டும்.
ஆனால், மலேரியா நோய் இந்நாட்டில் அகற்றப்பட்டு மூன்று வருடங்களும் ஒன்பது மாதங்களுமாகின்றன. தற்போதைய நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உயர் அதிகாரிகள் குழுவினர் எமது நாட்டிற்கு வந்து பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பரிசோதனையின் பின்னர், மலேரியா நோய் இலங்கையில் இல்லாமையை உறுதிப்படுத்தி, உலக சுகாதார ஸ்தாபனம் அதற்கான சான்றிதழை வழங்கவுள்ளது.
மலேரியா நோய் ஆரம்ப காலத்தில் உயிர்க்கொள்ளி பயங்கர நோயாக இலங்கையில் இருந்தது. 1934ஆம் ஆண்டு காலப்பகுதியில் பதினைந்து இலட்சம் பேர் மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டு, அவர்களில் 80 ஆயிரம் பேர் பலியாகினர். ஆறுமாத கால எல்லைக்குள் இந்தளவு மரணமாகியுள்ளமை பெரும் கவலையைத் தருகின்றது.
அத்துடன், 1963ஆம் ஆண்டு மலேரியா நோய் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரண்டு இலட்சம் பேர் மட்டுமே, மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மலேரியா நோயினை பூரணமாக கட்டுப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொண்டோம்.
உலகில் மேலும் 100 நாடுகளில், இந்நோய் பரவி வருகின்றது. உலக சுகாதார ஸ்தாபன பட்டியலில் 101 நாடுகள் இருந்தபோதிலும், அப்பட்டியிலிலிருந்து இலங்கை அகற்றப்பட்டதினால் 100 நாடுகளில் மட்டுமே, மலேரியா நோய் இன்றும் இருந்து வருகின்றது.
இலங்கையில் இறுதியாக ஹல்துமுல்லையில் ஒருவரும், பசறையில் ஒருவருமாக இருவர் நோய்வாய்ப்பட்டு, தற்போது அவர்களும் பூரணமாக குணமடைந்துள்ளனர். இவ்விருவரும் எமது நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், உகன்டா மற்றும் இந்தியாவுக்கு தொழிலுக்குச் சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026