2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’இளைஞர்களை ஒன்றிணைக்கவே மாநாட்டை நடத்தினோம்’

Kogilavani   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்   

“இளைஞர்களை ஒன்றுதிரட்டி, மலையகத்தில் சிறந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே, மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு நடத்தப்பட்டது. மாறாக அரசியல் நோக்கத்துக்காக அல்ல” என்று, கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  

“நாளைய உலகை நமக்கென படைப்போம்” எனும் தொனிப்பொருளில், மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு, கொட்டகலை சித்திவிநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில், சனிக்கிழமை (16)  நடைபெற்றது.  

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.  

இங்கு மேலும் கூறிய அவர்,   

“மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு, 25 வருடங்களின் பின்னர் நடைபெறுகிறது. ஒருநாட்டின் முன்னேற்றத்திலும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திலும் இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.  

“1971 ஆண்டு காலப் பகுதியில், மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னெடுத்த போராட்டத்தால், 25 சதவீதமான இளைஞர்கள், அரசியலுக்குள் பிரவேசித்தனர். மலையக இளைஞர்கள், கல்வி ரீதியிலும் வேலைவாய்பை பெற்றுக்கொள்வதிலும், பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.   

“கல்வி கற்றவர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இன்மை போன்ற பல காரணங்களால், மலையக இளைஞர், யுவதிகள், விரக்தி நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு, மன விரக்தியில் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு, திடமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.   

“இளைஞர்கள், கலைத்துறை போன்ற ஏனைய துறைகளிலும் தங்களது கவனத்தைச் செலுத்துவார்களேயானால், தவறான எண்ணங்களிலிருந்து விடுபடுவார்கள். இளையோர் சமூகம், ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே, சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .