2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

உள்ளூராட்சி சபைகளிலும் 'ஐ.தே.க ஆதிக்கம் செலுத்த வேண்டும்'

Kogilavani   / 2016 ஜூலை 27 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஷ்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், அம்பகமுவ பிரதேச சபை மற்றும் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் ஆதிக்கத்தை ஐ.தே.க பெறவேண்டும். பிரதேச மக்கள், யாருக்கும் விலைபோகாமல் பூரண ஆதரவை ஐ.தே.கவுக்கு வழங்க முன்வர வேண்டும். இதற்காக, ஐ.தே.கவின் புதிய அங்கத்தவர்கள் இணைப்பில் அனைவரும் பங்குக் கொள்ளவேண்டும்' என நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினருமான கே.கே.பியதாஸ தெரிவித்தார்.

'கடந்த 20 வருடங்களாக அம்பகமுவ பிரதேச மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியினூடாக பெற்றுக்கொள்ள வேண்டிய சேவையில் பின்னடைவையே கண்டனர். ஐ.தே.கவின் தற்போதைய கூட்டு அரசாங்கத்தினூடாகவே அம்மக்கள், சேவையை பெற்றுக்கொள்கின்றனர். தனி அரசாங்கத்தை அமைக்கும் பலத்தை பெறுவதற்காக, ஐ.தே.க.விலிருந்து விலகிச்சென்ற அங்கத்தவர்களை, மீண்டும் கட்சியில் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம்,  ஹட்டன் தொழிலாளர் சங்க காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

'அம்பகமுவ பிரதேசத்தின்  நாடாளுமன்ற  உறுப்பினர் என்ற வகையில், இப்பிரதேச மக்களின் நலனில் மற்றுமல்லாது அவர்களுக்கான  உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலும்; எனக்கு பாரிய பங்குண்டு. நுவரெலியா மாவட்டத்தின் ஐ.தே.க  அமைப்பாளர் மற்றும் அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற ரீதியில், இப்பிரதேச மக்களின் தேவைகளை பாகுபாடின்றியும் ஊழல் அற்ற ரீதியிலும் முன்னெடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.
படித்த இளைஞர் யுவதிகளுக்கு இலங்கையில் மட்டுமன்றி கொரியா, யப்பான், இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலும் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுத்து வருகின்றோம். இந்த வேலைவாய்ப்பில், எமது பிரதேசங்களையும் இணைத்துக் கொள்வதில் எனக்கு பாரிய  பொறுப்புக்கள் உள்ளன' என்றார்.

'மஸ்கெலியா தியசிரிகம, கிளங்கன் பிரதேசங்களில் காணி சீர்த்திருத்த ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை, சில கிராம சேவையாளர்கள் முறையற்ற வகையில் விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில், அம்பகமுவ பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கமைப்பு குழு கூட்டத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து உரையாற்றினேன்.

சாதாரண மக்களுக்கு துரோகம் செய்யும் கிராம அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .