Kogilavani / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமை அலுவலகக் கட்டடத்தை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் கையகப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை என்று தெரிவித்துள்ள தொழிலாளர் தேசிய சங்கம் கட்டடம் குறித்து திலகராஜ் எம்.பி தெரிவித்துள்ள கருத்தையும் மறுத்துள்ளது.
இது தொடர்பில், சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தொழிலாளர் தேசிய சங்கம், 1965ஆம் ஆண்டு அமரர் வீ. கே.வெள்ளையன் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும் என்றும் சங்கத்துக்கென சொந்தமான கட்டடம் இல்லாத நிலையில், ஹட்டனில் வாடகைக் கட்டடமொன்றில் அதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அமரர வி.கே.வெள்ளையனின் மறைவுக்குப் பின்னர், தொழிலாளர் தேசிய சங்கம்; குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது என்றும் சங்கத்தை வேறு சிலர் கைப்பற்றிக்கொண்டதோடு, அதன் 'மயில்' சின்னமும் விற்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளார்.
அலுவலகத்துக்குரிய மாதாந்த வாடகை, உத்தியோகத்தர்களின் சம்பளம் முதலானவற்றை வழங்க முடியாத நிலையில் அதன் அங்கத்தவர்கள் பலர் மாற்றுத் தொழிற்சங்கங்களில் இணையத் தொடங்கினர் என்றும் இத்தகையச் சூழ்நிலையில்தான், தற்போதைய தலைவர் பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பொறுப்பேற்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
'அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையால், சங்கம் புத்துயிர் பெறத் தொடங்கியது. ஆரம்பகால உறுப்பினர்களுக்கு உரியமரியாதை கொடுத்து, உத்தியோகத்தர்களுக்கு சம்பளம், அவர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றோடு, அலுவலகக் கட்டடத்துக்குச் செலுத்த வேண்டிய வாடகை நிலுவை முதலானவற்றையும் செலுத்தி மீண்டும் சங்கத்தை எழுச்சி பெறச்செய்தார்.
'அதேநேரம் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தை உரிமையாளர் விற்பனை செய்ய முயன்றபோது, சங்கத்தின் தற்போதையப் பிரதித் தலைவர் உதயகுமார், தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி தமது பெயரில் விலைக்கு வாங்கிக்கொண்டார்.
'அதற்கான சாட்சிகளில் ஒருவராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கையொப்பமும் இட்டிருந்தார். அதே கட்டடத்தில் அலுவலகம் தொடர்ந்து இயங்கிவருகிறது எனினும், அதற்கான வாடகை எதனையும் அவர் பெற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பிரதித் தலைவர் உதயகுமார் இ.தொ.காவில் இணைந்துகொள்ள நேர்ந்தபோதும் அவர் எமது தலைவர் திகாம்பரத்தைப் பற்றிய விமர்சனத்தையோ, கட்டடத்துக்கு வாடகை தர வேண்டும் என்ற கோரிக்கையையோ முன்வைத்தது கிடையாது. அரசியல், தொழிற்சங்கப் பணிகள் வழமைபோல் இன்றும் இடம்பெற்று வருகின்றன.
'கட்சி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய நேரத்தில், கட்சியில் பிளவுகளை ஏற்படுத்தியதுடன், எமது கட்சியோடு இணைந்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினராக இருந்த எம்.உதயகுமார் போன்றோர் இ.தொ.காவில் இணைந்துகொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரே காரணமாக இருந்துள்ளார்.
'எனினும், கட்சியில் இருந்து பிரிந்துசென்ற உதயகுமார், மீண்டும் எமது கட்சியுடன் ஐக்கியமாகி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதால், மீண்டும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இரண்டாக தக்க வைத்துக்கொள்ள முடிந்துள்ளது.
'கட்சியிலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தலைமைக்கு எதிராக செயற்பட்ட காரணத்தால் கட்சியின் உயர்மட்டக் குழுவின் ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைய, கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டும், வெளியேற்றப்பட்டும் உள்ளார்கள்.
'கட்சியின் உத்தியோகபூர்வ தீர்மானங்களை சகித்துக்கொள்ள முடியாதவர்கள், கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக அவதூறு பரப்புவதிலும் அநாவசியமான விமர்சனங்களை மேற்கொள்வதிலும் குறியாக இருந்து வருகின்றார்கள்.
'நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால், எப்போதோ கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கும் என்ற உண்மை நிலையை எமது அங்கத்தவர்கள் நன்றாக உணர்வார்கள். நாம் என்றும்போல, கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் சகலருக்கும் வாய்ப்புகளை வழங்கவும், உத்தியோகத்தர்களை ஜனநாயக ரீதியில் தேர்தல் ஊடாகத் தெரிவுசெய்யவும் தயாராக உள்ளோம்' என்றும் தெரிவித்துள்ளார்.
21 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 Jan 2026
21 Jan 2026