2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

காலக்கெடு விதிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 24 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

 

மலையகத் தோட்டத் தொழிலாளாருக்கான 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி, கொழும்பில் ஐந்து தினங்களாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்து வந்த இளைஞர்கள், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு காலக்கெடு விதித்து போராட்டத்தை, தற்காலிகமாக நேற்று முன்தினம் (22) மாலை ​கைவிட்டுள்ளனர்.  

எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டு, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டால், மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம், நாடளாவிய ரீதியில் தொடரும் என்றும், குறித்த இளைஞர்கள் எச்சரித்துள்ளனர்.  

தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில், இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்துள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் சம்பள அதிகரிப்பை வலியுறுத்திய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கந்தையா அசோக் என்பவர், தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.  

எவ்வாறாயினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தரப்புகள் எவரும் தம்மைத் தொடர்புகொள்ளவில்லை என்றும், போராட்டங்களைக் கருத்திற்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மூவரினதும் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

சம்பள அதிகரிப்பு சாத்தியமற்றது

குறித்த போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை, சாத்தியப்படாத சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுப்பதைக் காட்டிலும் தேயிலை கொள்வனவு செய்யப்படும் விலையில் அதிகரிப்புச் செய்ய வேண்டுனெ வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுப்பதே, பொருத்தமானது என்றார்.  

மேலும் தெரிவித்த அவர், “தேயிலை விலையை 750 ரூபாயாக்க வேண்டும் என்று போராட்டம் செய்வதே காலத்தின் தேவையாகும். காரணம், எமக்கு ஒரு கிலோ தேயிலைக்கு 570 மாத்திரமே கிடைக்கிறது. அதனால் 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்புச் சாத்தியமற்றது” எனவும் குறிப்பிட்டார்.  

“20 வருடங்களாக சம்பள அதிகரிப்புச் செய்யும் இயலுமை எமக்கு இருந்தமையால் அதனைச் செய்தோம். அதனால் எமது வருமானத்தை கருத்திற்கொண்டே ​சம்பள அதிகரிப்பை வழங்க முடியும்” என தெரிவித்த அவர், ​“1,000 ரூபாய் ​பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென கோருகின்றவர்கள் தேயிலை தோட்டங்ககை பொறுப்பேற்று நடத்திப்பாருங்கள்” என்றும் சவால் விடுத்தார்.  

அதேநேரம் முதலாளிமார் சம்மேளம் ​அதிகளவில் தொழிலாளர்களுக்கு இலாபத்தை பெற்றுக்கொடுக்கும் சம்பளத் திட்டமொன்றை முன்மொழிந்த போதும், தொழிற்சங்கங்கள் ப​ழைமையான முறையில் சம்பள அதிகரிப்பு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பதாகவும் அவர் சாடினார். 

வரவேற்கத்தக்க பேராட்டம்

தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி, முதன் முறையாக இளைஞர்கள் களத்தில் குதிப்பது வரவேற்கத்தக்கதென தெரிவிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 1,000 சம்பள அதிகரிக்கை பெற்றுத்தர முன்வந்துள்ள தொழில் அமைச்சருக்கு, துணைச் சக்தியாக இருப்போமெனவும் தெரிவிக்கிறது. 

இதுகுறித்து மேலும் கருத்துரைத்த இ.தொ.காவின் உப தலைவர் எஸ்.அருள்சாமி, “நாம் எந்தவித போராட்டங்களையும் தூண்டிவிடவும் இல்லை. ​போராட்டங்களுக்கு முட்டுக்கட்டையிடப்போவதும் இல்லை. அதனால் இளைஞர்களின் போராட்டங்களை வரவேற்கிறோம்” என்றார். 

“தொழில் அமைச்சர் தோட்ட தொழிலாளர்களுக்கு 1,000 சம்பள அதிகரிப்பை வழங்க முடியும் என்று கூறியுள்ளார். எனவே இந்த நிலைபாடுகளை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்போம். தொழில் அமைச்சருக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்” என்றார்.  

இந்நிலையில் நாளாந்தம் 22 கிலோ கிராம் தேயிலை கொழுந்து பறிக்கப்பட வேண்டுமெனவும் அதற்காக கிலோ கிராம் ஒன்றுக்கு 45 ரூபாவை பெற்றுக்கொடுப்போம் என்றும் முதலாளிமார் சம்மேளனம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரம்பகாலத்திலிருந்து இந்த முறைமை பின்பற்றப்படவில்லை. எனவே, நடைமுறைச் சாத்தியமற்ற திட்டங்களை ஏற்றுகொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .