2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவை காங்கிரஸ் ஆதரிக்காது

Kogilavani   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சாமிவேல் சுதர்ஷினி

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் தெரிவுக் குழுவென்றை அமைத்து, அதனூடு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர் எஸ். அருள்சாமி  தெரிவித்தார்.மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மலையகத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர்கள், முன்வைத்துள்ளனர்.

இதுகுறித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானில் நேற்று செவ்வாய்க்கிழமை (08),  ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

தற்போது, மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அக்கோரிக்கையை இ.தொ.கா ஆதரிக்கப் போவதில்லை.

ஏற்கெனவே பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் உள்ளன. ஆனால், அவை எந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்டனவோ அந்நோக்கங்கள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.  வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால் இதுவரை, காணாமல் போனோர் குறித்த எவ்வித தகவலும் இல்லை.

இன்று, எமது நாட்டில் ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள், எந்தவகையில் சாத்தியமான ஒன்றாக இருக்கும் என்ற கேள்வி எழுகின்றது.

எனவே, நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு அழுத்தம் கொடுத்து, அதற்குள் அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கி, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டு அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .