Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Nirosh / 2019 பெப்ரவரி 26 , மு.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயிரம் ரூபாய் இயக்கத்தினருக்கு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் குண்டர்களால் கொலை அச்சறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்து, பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று, கொழும்பில் அவ்வியக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு, புறக்கோட்டை அரசமரச் சந்தியில் நேற்று(25) நடைபெற்ற இப்போராட்டத்தில் அமைச்சர் திகாம்பரத்துக்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதோடு, எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி, பொகவந்தலாவை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆயிரம் ரூபாய் இயக்கத்தினருக்கு பொகவந்தலாவை நகரில் அமைச்சர் திகாம்பரத்தின் குண்டர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததோடு, போராட்டத்தை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாதென அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், போராட்ட உரிமையை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அமைச்சர் திகாம்பரமும், இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானும் அரசியல் கொள்கை ரீதியில் கைகோர்த்துத் திரிகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், தொண்டமான் எவ்வாறு, வெறும் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்துவிட்டு, 40 சதவீத அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தேன் எனத் தெரிவிக்கிறாரோ அதுபோல, அமைச்சர் திகாவும், வெறும் 50 ரூபாய் அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்துவிட்டு, பெருந்தோட்டக் கம்பனிகளைக் காப்பாற்றியுள்ளதாகவும் கூறினார்.
தொழிலாளர்கள் எதிர்காலத்தையோ அல்லது அவர்களின் வாழ்வாதாரத்தையோ உயர்த்துவதற்கு இவர்கள் எதனையும் செய்ததில்லை. தொழிலாளர்களின் எதிர்காலம் தொழிலாளர் வர்க்கத்தினரிடமே இருக்கிறது என்றார்.
மலையகத் தலைவர்களென மார்தட்டிக்கொள்ளும் மலையக அரசியல்வாதிகள், மலையகத் தலைவர்கள் இல்லை என்பது, தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்கள் அனைவரும் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட வேண்டியவர்களே எனவும் தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினையை வைத்துகொண்டு, சில ஊடகங்களும் நாடகமாடி வருகின்றன. இவர்களும் பெருந்தோட்டக் கம்பனிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆயிரம் ரூபாய் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களாகப் பல்கலைக்கழக மாணவர்களும் சிவில் அமைப்புகளும் காணப்படுகின்ற நிலையில், இந்த மாபெரும் இயக்கத்தை இனவாதக் கருத்துகளைப் பரப்பி முடக்கவும் மலையக அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் எனவும் அவர் இதன்போது குற்றஞ்சுமத்தினார்.
போராட்டம் தொடர்பான தெளிவூட்டல் மேற்கொண்டிருந்த 1000 ரூபாய் இயக்கத்தின் அங்கத்தவர்களுக்கு அரச குண்டர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 15 பேரினுடைய தேசிய அடையாள அட்டைகள், பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதோடு, சுமார் ஒரு மணித்தியாலம் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .