2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ஊ.சே.நிதியின் 30%ஐ வழங்கவும்

Kogilavani   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பசறையை சேர்ந்த நபருக்கு, நிதி சட்டத்துக்கு அமைய, அவரது ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 30 சதவீதத்தை பெற்றுகொடுப்பதற்கு ஆவண செய்யுமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண, தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண, தொழில் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் இரா.சாலோபராஜா, அவசர தொலைநகல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'பசறை, பட்டவத்தையை சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளியான சாகுல் ஹமிட் சலீம், புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் பதுளை வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். அத்தொழிலாளி  வைத்திய செலவுகளை மேற்கொள்ள முடியாமல், பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியில், 30 சதவீதத்தை, வைத்திய செலவுகளுக்காக பெற்றுக்கொள்ள முடியுமென்று, சட்டம் உள்ள போதிலும்  அப்பணத்தை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலையை மேற்படி தொழிலாளி எதிர்கொண்டுள்ளார்.  
இப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஆவணங்களில் தோட்ட முகாமையாளர் மற்றும் புற்றுநோய்க்காக சிகிச்சை அளித்த வைத்திய நிபுணரிடம் கையொப்பங்களைப் பெற்றிருந்தாலும் மாகாண பொது வைத்தியசாலை அத்தியட்சகர் கடைசியாக தனது கையொப்பத்தை இட்டு உறுதிப்படுத்தியதன் பின்னரே, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை தொழில் திணைக்களத்தில் ஒப்படைக்க முடியும்.

மேற்படி ஆவணங்கள், தொழில் திணைக்களத்தின் ஊடாக இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டு பின்னரே, பணத்தை பெற்றுகொள்ள முடியும்.   

பாதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளி பல தடவைகள் பதுளை பொது வைத்தியசாலை அத்தியட்சகரை சந்தித்து, தனது விண்ணப்பப்படிவத்தில் அவரின் கையொப்பத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.        

எனவே, தொழிலாளியின்  ஊழியர் சேமலாப நிதியின் 30 வீதமான இரண்டு இலட்சத்து  67,329.20 ரூபாயை  பெற்றுகொடுக்க ஆவண செய்யவும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

நகலின் பிரதிகள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான
எஸ்.சதாசிவத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .