2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வருவோம்: இராதாகிருஸ்ணன்

Kogilavani   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், தனக்குத்தான் எல்லாம் தெரியும், மற்றையவர்கள் மடையர்கள் என நினைத்து கொண்டா ஊடகங்களில் அறிக்கை விடுகின்றார்? அவர் மாகாண சபை உறுப்பினராக இருந்து மலையகத்துக்குத் தேவையான விடயங்களை செய்யாமல் கல்வி இராஜாங்க அமைச்சில் குறைகண்டு பிடித்து வருகின்றார்' என இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிஷ்ணன் சாடியுள்ளார்.

'எமது மலையகத்தின் கல்வியை முன்னேற்ற வேண்டுமானால் வடக்கிலிருந்து மட்டுமல்ல, வேறு நாடுகளிலிருந்தும்  ஆசிரியர்களை கொண்டுவந்து, சிறந்த கல்வியை இந்த சமுதாயத்துக்கு கொடுக்க வேண்டும். அதுதான், ஓர் அமைச்சர் என்ற ரீதியில் எனது கடமை' எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

'மலையக பாடசாலைகளுக்கு வடக்கில் இருந்து கணித, விஞ்ஞான மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவது உண்மைதான். மேற்படி துறைகளில் போதிய அளவு பட்டதாரிகள்  மலையகத்தில் இல்லை. 100 நாட்கள் வேலைத்திட்ட காலப்பகுதியில்  கணித, விஞ்ஞான மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதில் நான்கு விண்ணப்பங்கள் மட்டுமே எமக்கு கிடைத்தன. தற்போதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் கிடைத்தால் அவர்களையும் இணைத்துக்கொண்டு மிகுதியானவர்களை வடக்கிலிருந்து நியமிக்க நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளோம். இது அவருக்கு தெரியாது.

நான் மாகாண சபையில் இருக்கும்போது  கணித, விஞ்ஞான பட்டதாரிகள் 105 பேருக்கு நியமனங்கள் வழங்கினேன். 10 வருடங்கள் மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்திருக்கின்றேன். அது ஓர் பொற்காலம். அப்போது நான் விதைத்த விதைகளின் பலன்களைதான் தற்போது மத்திய மாகாணம் அறுவடை செய்து வருகின்றது. இதை மலையக கல்விசார் சமூகத்திடம் கேட்டால்  அறிந்துக் கொள்ளலாம்.

மலையகத்தில் படித்த பட்டதாரிகள் இல்லை என்று கூறவில்லை. இருக்கின்றவர்களில் பெரும்பாலானோர் கலை, வணிகப் பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களிலும் பெருபாலானோர் இந்தியாவில் படித்து பட்டதாரியானவர்கள். 35 நியமனங்களை வைத்துக் கொண்டு மலையகத்தில் கணித, விஞ்ஞான மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்ய முடியாது.

தற்போதுள்ள கணினி தொழில்நுட்ப யுகத்தை கருத்திற்கொண்டு, மலையகத்தில் கட்டாயம் கணித, விஞ்ஞான மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளை மிகவும் அவசரமாக அபிவிருத்தி செய்ய வேண்டும். மலையக  மாணவர்களும் உலகமயமாக்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இதை நான் இராஜாங்க கல்வி அமைச்சர் என்ற வகையில் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன். அதற்காகத்தான் 23 விஞ்ஞான, கணித, பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கு 250 மில்லியன் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 30 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
'அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்ற செயற்திட்டத்துக்கு இணங்க, 20க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மலையகத்தில் அபிவிருத்தி செய்யப்;படவுள்ளன.     

கணபதி கனகராஜிடம் கணித, விஞ்ஞான மற்றும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் எத்தனை பேர் உள்ளனர்?. முறையான தகவல் இருக்கின்றதா? தகவல் இல்லாமல் அறிக்கைவிட வேண்டாம். நாங்கள் தகவலின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுத்து வருகின்றோம். மலையக கல்வித்துறையில் அரசியல் வேண்டாம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு மலையக கல்வியை அபிவிருத்தி செய்யவேண்டும். அதற்காக மலையகத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றார்கள். இந்நிலையில் கணபதி கனகராஜ், கல்வித்துறையை அரசியல் ரீதியில் உற்றுநோக்குவது கண்டிக்கத்தக்கதாகும். அது அவர் மலையக மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.  

மலையக மாணவர்கள் கல்வியில் முன்னேறிவிட்டால் அவர்கள் சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். அப்படி சிந்தித்தால் இவர்களை போன்ற அறிக்கை மன்னர்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள்.  

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, எமது மலையக பகுதிகளில் ஆசிரியர்களாக கடமையாற்றிய அநேகமானவர்கள் வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள். அவர்களிடம் கல்வி கற்ற மாணவர்களில்; இன்று பலர் மலையகத்தில் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள்  என்பதை கணபதி கனகராஜிக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .