2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காளி கோவில் விவகாரம்: பிரபா எம்.பியை சந்திக்க பிக்கு மறுப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை, பத்திரகாளியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் சமரசம் தேவையில்லை என்று கூறி தன்னை சந்திப்பதற்கு  தம்புள்ளை பௌத்த பிக்கு மறுத்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார்.           

தம்புள்ள பத்திரகாளியம்மன் கோயில் விவகாரம் தொடர்பில் இரு தரப்பினருடனும் பேசி இந்து ஆலயம் அமைப்பதற்கு  புதிய இடத்தைப் பெறுவதற்கான விடயங்களில் ஈடுபடுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதற்கிணங்க சம்பந்தப்பட்ட தலைமை பௌத்த பிக்குவான ஸ்ரீ சுமங்கல தேரரை சந்திப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரை முதலில் சந்திப்பதற்கு கடந்த சனிக்கிழமை ஒப்புக்கொண்ட பௌத்த பிக்கு பின்பு சமரசம் தேவையில்லை என்று கூறி சந்திக்க மறுத்துவிட்டதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'முதலில் சந்திக்க ஒப்புக்கொண்ட தலைமை பௌத்த பிக்கு பின்பு இந்து கோவிலுக்கு இதன் மூலமாக மாற்று இடம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டதனால் என்னை சந்திக்க மறுத்துவிட்டார். தனது செயலாளர் ராஜபக்ஷ மூலமாக சமரசத்திற்கு தான் தயார் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படியான பௌத்த இனவாதம் கொண்ட பௌத்த பிக்குவை சந்திக்க வேண்டிய அவசியமும் இப்பொழுது எனக்கு இல்லை. அதேநேரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க மறுக்கும் இந்த பௌத்த இனவாத தேரர் தம்புள்ளையில் வசிக்கும் தமிழ் மக்கள் தொடர்பாக எப்படி செயல்பட்டிருப்பார் என்பது தெளிவாக தெரிகிறது.

ஏற்கனவே 15 வருடங்களுக்கு முன்பு வேறு இடத்திலிருந்த ஒரு கோவிலையும் இவர் அப்புறப்படுத்தியிருக்கின்றார். இவரை சந்திக்க நினைத்தது ஒரு மரியாதையின் நிமித்தமே. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் இவரை நான் ஒரு துறும்புக்குக்கூட கணக்கெடுக்க விரும்பவில்லை. தமிழ் ஊடகளுக்கு மட்டும் நான் இதை தெரிவித்து அரசியல் செய்ய விரும்பவில்லை. மாறாக இவரது இனவாதத்தை சிங்கள ஊடகங்களிலும் அம்பலப்படுத்துவேன்.

அது மட்டுமின்றி முஸ்லிம் மக்களுக்கும் எதிராக இவர் செயல்பட்டிருக்கின்றார். தமிழ் முஸ்லிம் மக்களை தம்புள்ளை பகுதியிலிருந்து வெளியேற்றுவதுதான் இவரது அடிப்படை நோக்கமாக இருக்கின்றது. இதற்கு தம்புள்ளை பொலிஸ் பொறுப்பதிகாரி இவருக்கு உடந்தையாக இருக்கின்றார். நகர அதிகார சபையும் இவ்விடயத்தில் இரட்டை வேடம் போடுகின்றது. இறுதியாக எல்லோரும் இனவாதமாகவே செயல்படுகிறனர்.

இவ்விடயம் சம்பந்தமாக பிரதமருடன் பேசிய பொழுது தான் உடனடியாக புதிய இடத்தை இந்து ஆலயத்திற்கு வழங்குமாறு கோரியும் நகர அதிகாரசபை உடனடியாக வழங்காததினாலேயே ஆலயம் உடைக்கப்பட்டதற்கு காரணம் என்றும் தெரிவித்தார். இதிலிருந்து மதங்களுக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கும் பிரதமருக்கு இந்த அரசாங்கம் கொடுக்கும் மரியாதை வெட்ட வெளிச்சமாகின்றது.

இருப்பினும் இந்து ஆலயத்திற்கு புதிய இடத்தைப் பெற்றுக் கொடுப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அது மட்டுமின்றி தம்புள்ளை பகுதி முஸ்லிம் சமூகமும் என்னிடம் கைகோர்த்துள்ளார்கள்.

புதிய இடத்தை நகர அதிகாரசபை வழங்காவிட்டால் இந்த அரசாங்கம் பௌத்த இனவாத அரசாங்கம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எதிர் கட்சியில் இருந்து கொண்டு கண்டனங்களை மட்டுமே தெரிவித்துக்கொள்ள முடியும். ஆனால் நான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுகிறேன். நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்' என்றார்.

  Comments - 0

  • M.A.A.Rasheed Monday, 11 November 2013 09:07 AM

    தேரரை சந்திப்பது எதற்காக? அவர் யார்? தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு நல்லதொரு முடிவு எடுக்க வேண்டும். இதில் அரசும் இரட்டை வேடம் போடுகிறது.

    Reply : 0       0

    Ash Monday, 11 November 2013 02:11 PM

    அதிகமானவர்கள் தாம் பின்பற்றும் மதத்தின் போதனைகளை பின்பற்றத் தயாரில்லை. அதனால் தான் இனவாதம் அதிகரித்திருக்கின்றது. அது மட்டுமன்றி கொலை, கொள்ளை, மது, விபச்சாரம் போன்றனவும் அதிகரித்துள்ளன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .