Gavitha / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹங்குராங்கெத்த கல்வி வலயத்தில் தமிழ்மொழி கல்வி வளர்ச்சி குறித்து மத்திய மாகாண கல்வி அமைச்சு அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீரீதரன் தெரிவித்தார்.
ஹங்கராங்கெத்த, ஹேவாஹெட்ட ரொக்வூட் இல.01 தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் இராமகிருஸ்ணன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், ஹங்குராங்கெத்த பிரதேச உறுப்பினர் தியாகராஜா மற்றும் பிரதேச அமைப்பாளர் சதானந்தன் உள்ளிட்ட கட்சிப்பிரமுகர்கள், ஆசிரிய மாணவர்களோடு பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
'ஹங்குராங்கெத்த கல்வி வலயத்தில் 12 தமிழ்ப் பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 225க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். எனினும் இத்தமிழ் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கென ஹங்குராங்கெத்த கல்வி வலயத்தில் தமிழ்க் கல்விப்பிரிவொன்று உருவாக்கப்படாமை பாரபட்சமானதொரு விடயமாகும்.
இந்த வலயத்தில் தமிழ்க்கல்விப் பிரிவொன்று இல்லாத காரணத்தினால், கல்வி அதிகாரிகள், பாட இணைப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பாடசாலை மேற்பார்வைகள் இடம் பெருவதில்லை.
இவ்வாறானதொரு நிலைமை தமிழ் மாணவர்களின் கல்வியைப் பாதிக்குமென்பது பலரும் அறிந்த விடயமாகும். எனவே, மத்திய மாகாண கல்வி அமைச்சு இவ்விடயம் குறித்து அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
மிகவும் கஷ்டப்பிரதேசத்தில் அமைந்துள்ள ரொக்வூட் இலக்கம் 01 பாடசாலையில் இல்ல விளையாட்டுப்போட்டி தொடர்ச்சியாக இடம் பெறுகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும். அமைச்சர் திகாம்பரத்தின் ஊடாக கடந்த வருடம் ஹங்குரான்கெத்த தொகுதி தோட்டப்பகுதி அபிவிருத்தி, பாரிய நிதியொதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல இவ்வருடமும் பாரிய நிதியொதுக்கீடு செய்துள்ளோம்.
இதேபோல, இப்பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்தும் நாம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றோம். இந்த நிலையில், இப்பிரதேச மக்கள் தொடர்ந்தும் அரசியல் அநாதைகளாகவே இருந்து வருகின்றமை வருந்தத்தக்கதாகும். காரணம் இங்கு வரும் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் இம்மக்களின் வாக்குகளை சூறையாடிவிட்டு அதன்பின்பு அடுத்த தேர்தல் வரை மக்களை கண்டு கொள்வதில்லை.
நாம் அப்படியல்ல. ஏற்கெனவே எமது தொழிற்சங்கம் இங்கு புதிதாக எழுப்பப்பட்டு மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றி வருகின்றன. இதை போலவே எங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் ஹங்குராங்கெத்த பிரதேசத்துக்கென விசேடமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago