2021 ஜூன் 14, திங்கட்கிழமை

'வத்தளை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் காணி பறிபோக போகின்றதா?'

Super User   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வத்தளை தொகுதியில் அமைந்துள்ள ஒரு தனித் தமிழ் பாடசாலையான வத்தளை ரோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் அமைந்திருக்கும் காணியை  தந்திரமாக அபகரிப்பதற்கு வத்தளையில் உள்ள சில பேரினவாத மற்றும் மதவாத சக்திகள் முயற்சி செய்கின்றனவா? என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக தன்னை வத்தளை வாழ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழு சந்தித்து தகவல்களை தந்துள்ளதாக கூறியுள்ள மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,
 
வத்தளையிலே பெருந்தொகையிலான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். எனினும் வத்தளையிலே முழுமையான தனித் தமிழ் பாடசாலை என்றும் ஒன்றும் கிடையாது. இது தொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக இருந்தாலும் கூட இது சாத்தியமாகவில்லை என்பது தொடர்ந்து நிலவுகின்ற ஒரு பாரிய குறைப்பாடாகும்.
 
வத்தளையில் வாழ்கின்ற மிகவும் பின்தங்கிய ஏழை எளிய தமிழ் பிள்ளைகள் தங்களது ஆரம்ப கல்வியை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை நடத்துகின்ற ஒரே தனித் தமிழ் பாடசாலையாக வத்தளை ரோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் வித்தியாலயம் விளங்குகின்றது.

இந்த பாடாசலை அமைந்துள்ள 60 பர்ச்சஸ் காணி முற்று முழுதாக மேல் மாகாண சபை கல்வி திணைக்களத்திற்கு சட்டப்படி உரிமையானதாகும். இது தொடர்பிலான வர்த்தமானி பிரகடனம் 1962ம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டிருக்கின்றது.

எனினும் இந்த காணி தங்களுக்கு உரிமையானது என அருகாமையில் அமைந்திருக்கக்கூடிய கத்தோலிக்க தேவாலயத்தை சார்ந்த பெரும்பான்மை இன பிரிவினர் தெரிவித்து வருகின்றனர். இது முற்றும் முழுதும் பிழையானதாகும். மாகாண சபைக்கு சொந்தமான ஒரு காணியில் ஏழை பிள்ளைகளின் கல்விக்காக நடத்தப்படுகின்ற ஒரு மாகாண பாடசாலையை அந்த இடத்திலிருந்து பலாத்காரமாக அகற்றுவதற்கு எந்தவொரு மத நிறுவனத்திற்கும் அதிகாரம் கிடையாது.

ஏழை பிள்ளைகளின் கல்விக்கு வழி வகுப்பதே கடவுளுக்கு செய்யும் மகத்தான சேவையாகும். இதை மறந்து வத்தளையிலுள்ள கத்தோலிக்க தேவாலயம் பேரினவாத சிந்தனையுடன் செயற்படுகின்றது.  இப்பாடசாலை தற்சமயம் அமைந்துள்ள காணியிலிருந்து அதை அகற்றி அருகாமையில் அமைந்துள்ள இன்னொரு காணியிலே கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் நடத்த வேண்டும் என்று இந்த தேவாலயத்தை சார்ந்தவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

ஆனால் அந்த புதிய காணி  வத்தளையில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கான சிங்கள பாடசாலை ஒன்றை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட காணியாகும். அது சம்பந்தமான வர்த்தமானி பிரகடனம் 1961ல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த காணியின் ஒரு பகுதியில் கல்வி திணைக்களத்தை சார்ந்த அலுவலகமும், பிரதேச பொறியியல் அலுவலகமும் செயற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் எதிர்காலத்தில் சிங்கள பாடசாலை கட்டுவதற்காக இந்த காணியை தமக்கு திருப்பி தருமாறு வத்தளை சிங்கள மக்கள் சட்டப்படி கோரிக்கை விடுக்கலாம்.

அதேபோல் அந்த காணியில் இன்னும் மேலதிகமான அரச அலுவலகங்கள் அமைக்கப்படலாம். இந்த நியாயமான அச்சங்களின் காரணமாக, அந்த காணியை முழுமையாக தமிழ் பாடசாலைக்கு உரிய காணி என்ற வர்த்தமானி பிரகடனத்தை சட்டப்படி செய்து தரும்படி மேல்மாகாணசபையிடம் நாம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம்.

இந்த காணியில் அமைந்துள்ள அரச அலுவலகங்களை அகற்றிவிட்டு, இக்காணியை முழுமையாக தமிழ் பாடசாலைக்கு சட்டப்படி ஒதுக்கி தருவதுடன், இரண்டு புதிய கட்டிடங்களையும் கட்டுவித்து, கழிவறை தொகுதியையும் கட்டுவித்து தமிழ் பாடசாலைக்கு ஒப்படைப்பதாக மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் செயலாளர் 2008ஆம் வருடத்திலேயே எழுத்து மூலமாக உறுதியளித்துள்ளார்.

ஆனால் இன்று வரை இந்த உறுதி எதுவும் நிறைவேற்றப்படாமல் அவசர, அவசரமாக தமிழ் பாடசாலையை புதிய காணிக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்யப்படுகின்றது. தற்சமயம் பாடசாலை அமைந்துள்ள காணியை கைப்பற்றுவதற்கு காட்டப்படும் இந்த பேரினவாத அவசரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. இது சம்பந்தமாக அப்பாவி பெற்றோர்களுக்கு போதிய தெளிவு இல்லாமல் இருக்கின்ற நிலைமையை பயன்படுத்தி, இப்பாடசாலையின் தற்போதைய அதிபரும் இந்த பேரினவாத செயற்பாட்டிற்கு துணை போகின்றாரா என்பதையும் நாம் கண்காணித்துக்கொண்டிருக்கின்றோம்.

இது சம்பந்தமாக நான் தற்சமயம் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்ஷ, ஜயலத் ஜயவர்தன, விஜித ஹேரத், அத்துரெலிய ரத்தன தேரர் மற்றும் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில அகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.

எதிர்வரும் 24ஆம் திகதி இப்பாடசாலை இடமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுவது உடனடியாக இடைநிறுத்தம் செய்து, சகல தரப்பினரும் கலந்துகொள்ளும் கலந்துரையாடலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். இது தொடர்பிலே சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக கத்தோலிக்க பேராயருக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன எனக்கு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .