2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கோவில் உடைப்பு விவகாரம் சம்பந்தமாக பிரதமரிடம் முறைப்பாடு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு, கொள்ளுப்பிட்டி பூமாரி அம்மன் கோவில் மற்றும் தம்புள்ள பத்திரகாளி அம்மன் கோவில் பிரச்சினை சம்பந்தமாக மத விவகார அமைச்சரும் பிரதமருமான தி.மு.ஜயரத்னவை அவரது அலுவலகத்தில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் சந்தித்து முறைப்பாடு செய்ததாக முன்னால் மாநகரசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளருமான என்.ரவிகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 
 
மேலும் அவர் தெரிவித்ததாவது,
 
கோவில் உடைப்பு சம்பந்தமாகவும் மேலதிக கோவில்களுக்கு நிதி வழங்குவது சம்பந்தமாகவும் மத விவகார அமைச்சரும் பிரதமருமான தி.மு.ஜனரத்னவை அவரது அலுவலகத்தில் ஜ.ம.கா குழுவினர் பிரபா கணேசன் எம்.பி தலைமையில் சந்தித்தோம். இச்சந்திப்பின் போது ஜனாதிபதியின் இந்து மத விவகார ஆலோசகர் பாபுசர்மா ராமச்சந்திர குருக்களும் கலந்து கொண்டார். அதேநேரம் தம்புள்ள கோவில் சம்பந்தப்பட்டவர்களையும் அழைத்துச் சென்றிருந்தோம். அனைத்து விவரங்களும் ஆதாரங்களுடன் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது. இவ்விரண்டு கோவில்களுக்கும் மாற்று இடம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. தம்புள்ள கோவில் சம்பந்தமாக உடனடியாக மாற்று இடத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் கோவில் விவகாரத்திற்கு உரிய நஷ்டயீட்டை வழங்கி புதிய இடம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு இந்து கலாச்சார திணைக்களத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. பிரதமரும் இதற்கு உடனடியாக தமது கவனத்தில் எடுப்பதாக உறுதியளித்தார்.
 
2013ஆம் ஆண்டு 100க்கும் அதிகமான கோவில்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். இருப்பினும் இவ் அமைச்சின் செயல்பாடுகள் பொது மக்களுக்கு சென்றடையவில்லை என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் 2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யும் பொழுது தமது சிபாரிசின் பெயரிலேயே செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தார். இந்து கலாசார அதிகாரிகள் மூலமாக நிதி வழங்கப்படுவது வெளிச்சத்திற்கு வருவதில்லை. ஆகவே நாடாளுமன்ற உறுப்பினரின் சிபாரிசின் மூலமாக நிதி வழங்கப்படுமாயின் இவ் அமைச்சின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த கூடியதாக இருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இருப்பினும் பிரதமருக்கு இவ்விரு கோவில் உடைப்பு சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை எடுக்கக்கூடிய அதிகாரம் இருக்கின்றதா என்ற சந்தேகம் சந்திப்பின் பின்னராக நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
 
மேலும் இச்சந்திப்பில் பாதிக்கப்பட்ட கோவில் நிர்வாகிகளும் ஜ.ம.கா சார்பாக இணைப்புச் செயலாளர் எச்.எச்.விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .