2026 மார்ச் 21, சனிக்கிழமை

கொழும்பு பெருநகர கூட்டுத்தாபனத் திட்டத்தில் தமிழ், முஸ்லிம்களை பாதிக்கும் நோக்கங்கள் உள்ளனவா?: மனோ க

Super User   / 2011 மார்ச் 25 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு பெருநகர கூட்டுத்தாபனத் திட்டத்தின் பின்னால் கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்சை,  மாநகரசபைகள், கொலொன்னாவை நகரசபை, கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலே வாழ்ந்துகொண்டிருக்கக்கூடிய தமிழ், முஸ்லிம் மக்களை குறிவைத்து பாதிக்கும் இரகசிய நோக்கங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம் பதில் அளிக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையொன்றில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

"கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கொழும்பு மாநகரபை, தெஹிவளை-கல்கிஸை மாநகரசபை, ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே மாநகரசபை, கொலொன்னாவை நகரசபை, கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளுராட்சி சபைகள் ஒரே கட்டமைப்பில் கொண்டுவரப்பட்டு கொழும்பு பெருநகர கூட்டுத்தாபனமாக மாற்றப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த முயற்சிகளுக்கு பின்னால் கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்சை,  மாநகரசபைகள், கொலொன்னாவை நகரசபை, கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபை பகுதிகளிலே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தமிழ், முஸ்லிம் மக்களை குறிவைத்து பாதிக்கும் இரகசிய நோக்கங்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம் பதில் அளிக்கவேண்டும்.

கொழும்பு மாவட்டத்திலே வாழும் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மிக அதிகமான பிரதிநிதிகளை கொண்டுள்ள கட்சியான, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் என்ற முறையில் இதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். தமிழ் ஊடகங்களும் இது தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவுப்படுத்தளை பெற்று தமிழ் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். 

கொழும்பு மாநகரத்தை அண்டியுள்ள உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து, புதிய கட்டமைப்பை உருவாக்குவது என்ற கருத்து புதியது அல்ல. 2001 இல் இருந்து இரண்டு வருடம் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க அரசாங்க காலத்தில் இத்தகைய ஒரு திட்டம் விவாதிக்கப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலரிமாளிகை  அலுவலகத்தில் இது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் கலந்துகொண்டிருந்தேன்.

இந்நிலையில் அரசாங்கம் இன்று கொண்டுவரும் திட்டத்திலே இருக்கக்கூடிய புதிய மாற்றங்கள் எவை என்பதை அறிந்துகொள்வதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். இது தொடர்பிலே அரசாங்கத்திலே இடம்பெற்றிருக்கும் தமிழ், முஸ்லிம் அந்தஸ்துள்ள அமைச்சரவை அமைச்சர்களும், இடதுசாரி அமைச்சர்களும் கூடியகவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்றோம் என்ற காரணத்திற்காக தமிழ் பேசும் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்காமல் இருப்பது கண்களை விலைபேசி விற்று, சித்திரம் வாங்குவதற்கு சமனாகும் என்பதை அரசாங்கத்தில் உள்ள தமிழ் முஸ்லிம் அமைச்சர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன்.

உட்கட்டமைப்பு வசதிகளை மாநகர பிரதேசத்தில் அபிவிருத்தி செய்வதையும், மகா கொழும்பு பிரதேசம் மக்கள் வாழ்வதற்கு உகந்த பிரதேசமாக மாற்றப்படுவதையும் நாங்கள் வரவேற்போம். ஆனால் இதை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கு நமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் மக்களின் வாக்குரிமைகளை அரசாங்கம் பறிப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது. அப்படியான ஒரு முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்குமானால், அதற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளுடன் இணைந்து ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதை உறுதிப்படக்கூறிவைக்க விரும்புகின்றேன்"
 


  Comments - 0

  • xlntgson Sunday, 27 March 2011 09:32 PM

    இருக்காது, பின்னே தலைநகரம் அல்லவா? கொழும்பில் கூட்டுப் பெரும்பான்மையாக இருந்தாலும் தமிழர் முஸ்லிம் ஒரு வேட்பாளரை ஒற்றுமையாக தேர்ந்தெடுத்ததும் இல்லை. அடுத்த முறை முஸ்லிம்களுக்கு அதற்கடுத்தமுறை தமிழருக்கென்று கூறப்பட்டதே ஒழிய, வழங்கப்பட்டதாக தெரியவில்லை, பதில் முதல்வராக அல்லாமல்! வெறும் அங்கலாய்ப்பு எதற்கு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X