2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

மேல்மாகாண சபையினூடாக பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: பிரபா கணேசன் எம்.பி

Menaka Mookandi   / 2012 மே 22 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணத்தில் நிழவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் முகமாக நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் பட்டதாரிகளுக்கு மேல்மாகாண சபையினூடாக ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடனான சந்திப்பின் பின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மேல்மாகாணத்தில் தமிழ்க் கல்வித் துறையில் நிழவும் பல குறைபாடுகளை மேல்மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம். தமிழ் கல்வி பணிப்பாளர்களுக்கு சரியான முறையில் கடமையாற்றுவதற்கான வசதிவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல் சம்பந்தமாகவும் கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் நிழவும் கட்டிட, தளபாட பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை, தமிழ் பாடசாலைகளுக்கான சிற்றூழியர் நியமனம் போன்ற பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இதன் மூலமாக இவ்வருட நிதியொதுக்கீட்டில் தமிழ் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கித் தருவதற்கு இணக்கம் காணப்பட்டது. கட்டிடங்கள் கட்டப்பட்டு முழுமையடையாதவற்றை உடனடியாக கட்டி முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.

எனது நிதியொதுக்கீட்டில் சுமார் 75 இலட்சம் ரூபா நிதியொதுக்கிடப்பட்டுள்ளதையும் தெரியப்படுத்தி அதைவிட அதிகமான நிதியினை தமிழ் பாடசாலைகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தோம்.

தமிழ் பாடசாலைகளை முழுமையான முறையில் அபிவிருத்தி செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். அதே நேரம் மேல்மாகாணசபை தமிழ் உறுப்பினர்கள் எவரும் தமிழ் பாடசாலைகளில் நிழவும் பற்றாக்குறைகளைப் பற்றி தனது கவனத்திற்கு கொண்டு வராததை மனவருத்தத்துடன் தெரிவித்தார்.

நாட்டில் எப்பகுதியில் வசிக்கும் பட்டதாரிகள் இல11, ஹேக் வீதி, பம்பலப்பிட்டியவிலுள்ள எனது அலுவலகத்திற்கு தமது விபரங்களை அனுப்புவார்களேயாயின் அவர்களது ஆசிரியர் நியமனத்தை உடனடியாக பெற்றுக்கொடுக்க முடியும்.
 
முதலமைச்சருடனான இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் அவரது நிதியொதுக்கீட்டுச் செயலாளர் எம்.பிருத்திவிராஜ் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் உப தலைவர் பி.வை.பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X