2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மீண்டும் மீண்டும் பொய் கூறின் பொய் தேரருக்கு மெய்யாகுமா?: பாஸ்க்கரா

A.P.Mathan   / 2012 ஜூன் 06 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் முன்னேஸ்வரக் கோயில் கோபுரத்தை விஸ்தரிப்பதற்காக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டபோது சந்திரவட்டக்கல் கிடைக்கப்பெற்றமை தொடர்பாக மதிப்புக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் அவ்விடம் முன்பு பௌத்த விகாரை இருந்ததாகவும் அதனை இடித்து முன்னேஸ்வரக் கோவில் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தமை தவாறும். இதனை தான் கடுமையாக மறுதலிப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்...

முன்னேஸ்வரம் கோவிலானது இராமர் வணங்கிய திருத்தலம் என தக்ஷ்ன கைலாய புராணத்தில் கூறப்பட்டுள்ளதையும் இவ் இராமாயணமானது சுமார் 7000 (ஏழாயிரம்) ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்திருந்ததாக இந்திய அறிஞரும் வானசாத்திர நிபுணருமான ஹரி கூறியுள்ளார். சேர் போல் பீரிஸ் தனது பொத்தகத்தில் முன்னேஸ்வர திருத்தலமானது விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன் இருந்த ஐந்து திருத்தலங்களில் ஒன்று என தெளிவுபடுத்தி, விஜயன் இலங்கைக்கு சுமார் 2600 வருடங்களுக்கு முன் வந்த போதும் அதற்கு முற்பட்ட காலத்தில் முன்னேஸ்வரம் கோவில் இருந்துள்ளதை தெளிவுபடுத்தியிருந்தார்.

கிழக்கிலங்கையில் போரதீவு, குருக்கள் மடம், வீரமுனை போன்ற இடங்களில் சந்திர வட்டக்கல் உள்ளதையும் முற்காலத்தில் கிழக்கிலங்கை கண்டி இராச்சியத்தின் கீழ் இருந்ததாகவும் அங்கு கண்டி மன்னர்கள் கோவில் புனருத்தாரணத்திற்கு உதவியதையும் அக்காலத்தில் தமது கண்டிய கட்டிடக்கலை மரபுகளையும் சேர்த்துள்ளதையும் அதேபோல் முன்னேஸ்வரத்திற்கும் கண்டிய மன்னர்களின் திருப்பணி நடைபெற்றதற்கான செப்புப்பட்டயம், கல்வெட்டு உள்ளதாக அறிய முடிகின்றது. அதில் கண்டி மன்னன் கீர்த்தி சிறி ராஜசிங்க ஆன நாயக்க மன்னனும், கோட்டை இராஜதானி காலத்தில் ஆட்சிசெய்த 6ஆம் பராக்கிரமபாகு மன்னனும் (1412 – 1467) முன்னேஸ்வரம் கோயிலுக்கும் பிராமனருக்கும் வழங்கிய பெருமளவு நன்கொடை வாசகம் கோவிலின் அதிஷ்டானத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்றும் அவை காணப்படுகின்றது.

கரையோர மாகாணங்களில் போர்த்துக்கேய செல்வாக்கு ஏற்பட்ட இடங்களில் அமைந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய பள்ளி என்ற வேறுபாடு இன்றி சகல மத ஸ்தானங்களும் அழிக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதேவேளை புத்தளம் மாகல (புதுமுத்தாவ) பௌத்த ரஜமகாவிகாரை மண்டபத்தில் ஒரே அளவான பல தூண்கள் காணப்படுவதையும் அவற்றில் இரண்டு தூண்களில் சாசனங்கள் எழுதப்பட்டதையும் அச் சாசனங்கில்; ஈஸ்வரன் கோயிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. அதேவேளை பௌத்த விகாரையின் ஒரு கட்டிடத்தில் சிவலிங்கமும் சேர்த்து கட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது. ஈஸ்வர சாசனம் ஆனது 12ஆம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாகவும், விகாரை 18ஆம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும் காணமுடிகின்றது. இதனை வைத்து நாம் சிவன் கோவில் இருந்த இடத்தில் விகாரை கட்டப்பட்டுள்ளதாக கொள்ளமுடியாது. அதேபோல் தான் சந்திரவட்டக்கல் இருந்ததை வைத்துக்கொண்டு மதிப்பிற்குரிய தேரர் பௌத்த விகாரை இருந்த இடத்தில் முன்னேஸ்வரம் கோவில் கட்டப்பட்டதாக கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை வரலாற்றில் பௌத்த சமயத்திற்கும், இந்து சமயத்திற்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் இருந்துள்ளன, இருந்துகொண்டும் இருக்கின்றன. அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பொய் மேல் பொய் கூறுவது போல் அரசின் பங்காளி கட்சியின் தேரர் அவர்களும் மதவாத கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்துவதுடன் சமய நல்லிணக்க பண்புகள் மேலோங்க ஆவண செய்ய வேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X