2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபர் பிரச்சினை தீர்க்கப்பட்டது: பிரபா எம்.பி

Menaka Mookandi   / 2012 ஜூலை 20 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பல மாதங்களாக சர்ச்சையிலிருந்த இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபர் நியமனம் பல தடங்களுக்குப் பின் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வருட இறுதியில் மேல்மாகாண அமைச்சின் மூலமாக நியமனம் பெற்ற ஆர்.உதயகுமார் தனது பொறுப்புகளை ஏற்பதற்காக இரத்மலானை இந்து கல்லூரிக்கு சென்ற பொழுது அங்கு கடமையிலிருந்த பதிலதிபர் பொறுப்புகளை கையளிக்க மறுத்து விட்டார்.

புதிய அதிபர் உதயகுமாரின் மனைவி கிறிஸ்தவர் என்ற காரணத்தினால் இந்து வித்தியா சங்கத்தினரும் இந்து மாமன்றத்தினரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பழைய மாணவர்கள் பெற்றோர்கள் புதிய அதிபருக்கு சார்பாக பாதையிலிறங்கி போராட்டங்களை நடத்தினர். 

புதிய அதிபர் உதயகுமார் எனது கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு வந்தார். அதே போல் இந்து மாமன்றத்தினரும் என்னை சந்தித்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். இதனையடுத்து பிரச்சினைக்கு தீர்வாக மேல் மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி களனி வலய கல்வி பணிப்பாளர் எஸ்.கணேசராஜாவை தற்காலிகமாக நியமித்தோம்.

மீண்டும் தகுதிவாய்ந்த புதிய அதிபரை நியமிக்குமுகமாக மாகாண அமைச்சு விண்ணப்பங்களை கோரியிருந்தனர். நேர்முக பரீட்சையின் பின் விண்ணப்பதாரர்களில் எஸ்.ஜெயகுமார் என்பவர் தெரிவுசெய்யப்பட்டார். ஆனால் அவரது நியமனத்திற்கும் இந்து வித்யா சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தெரிவுசெய்யப்பட்ட அதிபர் ஒரு இந்திய வம்சாவழியினர் என்பதே காரணமாக கருதப்பட்டதாக அறிந்தேன். இந்து வித்யா சங்கத்தினர் வடமாகாணத்தைச் சேர்ந்த பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் துணை அதிபரை நியமிக்குமாறு மீண்டும் என்னை வலியுறுத்தினர்.

எப்படியிருப்பினும் கொழும்பு மாவட்டத்திற்குள் பிரதேசவாதத்தை கொண்டு வருவதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். எனது அதிகாரத்திற்குட்பட்ட காலத்தில் இவ்வாறான பிரதேசவாத பிளவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாக மேல்மாகாண முதலமைச்சருடன் பேசி உடனடியாக ஜெயகுமாருக்கு நியமன கடிதத்தைப் பெற்றுக் கொடுத்தேன்.

அதனடிப்படையில் கடந்த வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஜெயகுமார் தனது பொறுப்புகளை கல்லூரி வளாகத்தில் பொறுப்பெடுத்தார். இந்த நிகழ்வுக்கு என்னுடன் மேல்மாகாணசபை உறுப்பினர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் கலந்து கொண்டார்.

கல்லூரியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் பழைய மாணவர்கள் பெற்றோர்களுக்கும், எனது வேண்டுகோளுக்கிணங்க செயல்பட்ட மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும்  எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X