2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தமிழ்ச்சங்க ஒழுங்கை பெயர்சூட்டல் தடையை கண்டிப்பதில் எந்தப் பயனும் இல்லை: மனோ

Menaka Mookandi   / 2012 நவம்பர் 26 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள வீதியின் பெயர் மாற்றம் இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டமையைக் கண்டித்து அரசாங்கத் தரப்பிலுள்ள அரசியல்வாதிகள் பலர் சம்பவத்தைக் கண்டித்தும் கவலை தெரிவித்தும் தமிழ் ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்புவதில் எந்தவித பயனும் இல்லை.

கண்டிப்பதை விடுத்து, தமது அரசாங்க தலைவருடன் உரையாடி, அரசாங்க நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எடுத்துக்கூறி இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக அரசாங்கத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் பணியாற்ற வேண்டும்' என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நமது கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் - மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியனின் முன் முயற்சியினால் இந்த நிகழ்வு நடைபெறவிருந்தது. இது தற்சமயம் தடைசெய்யப்பட்டமை சம்பந்தமாக எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளாமல், அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் வேண்டுகோளின் பேரில் நாம் பொறுமை காத்து வருகிறோம். இந்த வார முடிவுக்குள் இது தொடர்பான ஒரு கலந்துரையாடலை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரருடனும் நடத்தி தீர்வு காண்பதாக அவர் எனக்கு உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், ஆளும் அரசாங்க கட்சி எம்.பி அஸ்வர், இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். உண்மையில் ஒருசில இனவாதிகளின் அழுத்தம் காரணமாக ஆளும் அரசாங்க கட்சி முதலமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சம்பவத்தை, அதே அரசாங்க கட்சியின் அரசியல்வாதிகள் கண்டித்து, கவலை தெரிவித்து தமிழ் ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்புவதில் எந்தவித பிரயோஜனமும் கிடையாது. தமது அரசாங்க தலைவருடன் உரையாடி,  அரசாங்க நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எடுத்துக்கூறி இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் முகமாக அரசாங்கத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் பணியாற்ற வேண்டும்.

இந்து கோவில்களை உடைப்பதையும், முஸ்லிம் பள்ளிவாசல்களை இடிப்பதையும், கிறிஸ்தவ ஆலயங்களை முடக்குவதையும் ஆளுகின்ற அரசாங்க அமைச்சர்களும், எம்.பி.க்களும் கடுமையாக கண்டித்து அறிக்கை அரசியல் செய்வது மிகப்பெரும் வேடிக்கை. எதிர்க்கட்சிகளான நாம் எதிர்ப்பதையும், போராட்டங்களையும் பார்த்துகொள்கிறோம்.  அரசாங்கத்துக்குள் சகல சௌபாக்கியங்களுடன் இருக்கும் நீங்கள், எங்களது எதிர்ப்பை எடுத்துகாட்டியாவது, இத்தகைய அநீதிகளை தடுத்து நிறுத்தவேண்டும்.

கொழும்பு மாநகரசபையில் அனைத்து கட்சி ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானமே, வெள்ளவத்தை 57ஆம் ஒழுங்கையின் பெயர் 'கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை' என மாற்றப்படுவதாகும். இது சகல மாநகரசபை உறுப்பினர்களின் ஆதரவுடன் எமது கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் வேலணை வேணியனின் முன்முயற்சியாகும்.  

இது சம்பந்தமாக சட்டப்படி மேல்மாகாண  முதலைமைச்சர், ஆளுநர் ஆகியோரது அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்க காலக்கெடுவும் வழங்கப்பட்டு, இறுதியில் எந்தவித ஆட்சேபனைகளும் இல்லாத நிலையில், அதிகாரப்பூர்வ அரசாங்க வர்த்தமானியிலும்  அது பிரசுரிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இது தொடர்பான பெயர்சூட்டு விழா ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பிரமுகர்களின் பங்குபற்றலுடன் அரசியல், கட்சி பேதங்கள் இல்லாமல் நடைபெற இருந்தது. இந்நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை, ஆளுகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேல்மாகாணசபை  முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தனது முன்னைய எழுத்துமூல  அனுமதியை வாபஸ் வாங்கிகொண்டதால் இந்த விழா நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.    
                  
கொழும்பில் மாநகரத்தில் எத்தனையோ வீதிகளின் பெயர்கள் தன்னிச்சையாக மாற்றப்பட்டுள்ளன. வடக்கிலும், கிழக்கிலும் ஒட்டுமொத்த தமிழ் ஊர்களின் பெயர்களே, ஒரே இரவில் மாற்றப்படுகின்றன. இந்து, இஸ்லாமிய வணக்கஸ்தலங்களின் கட்டுமான பணிகள் பல அகழ்வாராச்சி என்ற பெயரில் நாடு முழுக்க தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதுதான் இந்த நாட்டின் இன்றைய நடைமுறை.

இந்த பின்னணியில், நடந்துள்ள கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை சம்பவம் மிகவும் அநீதியானது என்பது வெளியிடைமலையாக தெளிவாக தெரிகிறது. எனவே இது சம்பந்தமாக, இந்த பெயர்சூட்டும் பணியினை முன்னெடுத்த எமக்கு எவரும் விளக்கம் தர தேவையில்லை. நடந்த சம்பவங்களுக்கு ஆளும் அரசாங்க தமிழ், சிங்கள பிரமுகர்கள் கவலை தெரிவிப்பதை விட, நடைபெற்றுள்ள இந்த இனவாத போக்கை தமது அரசாங்கத்துக்குள் எடுத்துகூறி தீர்வு காண உதவ வேண்டும்.

இது நடைபெறாவிட்டால், எதிர்க்கட்சி என்ற முறையில் நாம் தேசிய,  சர்வதேசியரீதியாக இந்த பிரச்சினையை முன்னெடுப்போம். இதை எப்படி முன்னெடுப்பது என எனக்கு மிக சிறப்பாகவே தெரியும். எனினும் எமக்குள்ள நாகரீகமான அரசியல் கலாச்சாரத்தின் காரணமாக நாம் பொறுமையுடன் அமைதி காக்கின்றோம். இதை நான் இன்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களிடமும், எம்பி அஸ்வரிடமும் நேரடியாக தொலைபேசியில் அழைத்து  தெரிவித்துள்ளேன்.

எனவே ஆளும்கட்சி அமைச்சர்களுக்கும், எம்பீக்களுக்கும் இது தொடர்பாக பெரும் கடப்பாடு இருக்கின்றது. ஆனால், கடப்பாடு என்பது கண்டன  அறிக்கை அல்ல. இன்று நாட்டில் நடக்கும் இனவாத, மதவாத நடவடிக்கைகளை கண்டிப்பது சில அரசாங்க தரப்பு அரசியல்வாதிகளுக்கு வழமையாகிபோயுள்ளது.

பள்ளிகள் இடிக்கப்பட்டாலும், கோவில்கள் உடைக்கப்பட்டாலும் இவர்களும் சேர்ந்து கண்டிக்கிறார்கள்.  ஆனால் ஜனாதிபதியின் முன் இவர்கள் இவற்றைப்பற்றி எடுத்து கூறுவது இல்லை என இவர்களின் அரசாங்க கூட்டணி தலைவரான ஜனாதிபதியே பகிரங்கமாக கூறியுள்ளார்.

எனவே கண்டன அறிக்கை அரசியலை நிறுத்துவிட்டு, இதைப்பற்றி ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண உதவும்படி நான் சம்பந்தப்பட்ட அனைத்து ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கும்  அன்புடன் வேண்டுக்கோள் விடுக்கின்றேன்' என்றால்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X