2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

தொழிற்துறைகளை மேம்படுத்தும் வகையில் அமைசசு அதிகாரிகள் செயற்பட வேண்டும்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சினது உயர்நிலை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அமைச்சின் கீழான நிறுவனங்களின் தொழிற்சாலைகளை மேம்படுத்தும் வகையிலான எண்ணங்களைக் கொண்டு செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் இன்றைய தினம் (29) இடம்பெற்ற வடகடல் நிறுவனத்தின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது,

'எனது அமைச்சின் உயர்நிலை அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தமது கடமைகளை மக்களினது மேம்பாட்டையும் அபிவிருத்தியையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். அவ்வாறு அவர்களது எண்ணங்கள் அமைச்சின் கீழான நிறுவனங்களது தொழிற்சாலைகளின் தொழிற்துறை நடவடிக்கைகளை பாதுகாப்பது மட்டுமின்றி, மேம்படுத்தும் வகையில் கொண்டமைந்திருக்க வேண்டும்.

அவ்வாறு செயற்படும் பட்சத்திலேயே மக்களுக்கான சேவைகளை முழுமைபெறச் செய்ய முடியுமெனத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும்' என்றார்.

இதன்போது, வடகடல் நிறுவனத்திற்குக் கீழான லுணுவில, வீரவில மற்றும் குருநகர் மீன்வலைத் தொழிற்சாலைகளினது தொழிற்துறை முன்னேற்றங்கள் மற்றும் மூலப்பொருள் கொள்வனவு, உற்பத்திகள், முடிவுப் பொருட்களின் சந்தை வாய்ப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன், வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகளைத் தனியார் தொழிற்துறையின் ஊடாக மேலும் அதிகரிக்கும் பொருட்டு, முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, பழுதடைந்து இயங்காத நிலையிலுள்ள தொழிற்துறை இயந்திரங்களை மீள்திருத்தம் செய்து, அவற்றை தொழிற்துறை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துவதினால் ஏற்படக் கூடிய முன்னேற்றங்கள் தொடர்பிலும் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே, யாழ்ப்பாணம், குருநகர் மீன்வலைத் தொழிற்சாலையினது தொழிற்துறை நடவடிக்கைகள் அண்மைய காலங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள், அதன் தொழிற்துறை நடவடிக்கைகளை மென்மேலும் முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் விஷேட கவனம் செலுத்தினார்.

அத்துடன், ஏனைய மீன்வலைத் தொழிற்சாலைகளினது தொழிற்துறை நடவடிக்கைகள் முன்னேற்றுவது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் துறைசார்ந்தவர்களிடம் கேட்டறிந்;து கொண்டார்.

இதன்போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் பணிப்பாளர் அஜித் ஏக்கநாயக்க, வடகடல் நிறுவனத் தலைவர் திஸ்ஸ வீரசிங்க, பொது முகாமையாளர் யூசுப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X