2025 மே 21, புதன்கிழமை

பிரதியமைச்சர் மஸ்தான் தினச்சந்தைக்குக் கள விஜயம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா நகரில் அமைந்துள்ள மரக்கறி தினச்சந்தைத் தொகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் பிரச்சினைக்கு, சுமூகமான முறையிலான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென, வவுனியா நகரசபைத் தவிசாளரிடம் பிரதி அமைச்சர் கே. கே. மஸ்தான் கோரிக்கை விடுத்தார்.

வவுனியா நகரில் அமைந்துள்ள மரக்கறி தினச்சந்தையின் இடமாற்றம் தொடர்பாக உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக, பிரதி அமைச்சர் கே. கே. மஸ்தான், குறித்தச் சந்தைக்கு இன்று (13) காலை சென்றார்.

இதன்போதே, நகரசபை தவிசாளருடன் அலைபேசியில் கலந்துரையாடி, மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

குறித்த சந்தையில், 18 பேர் வரை மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், குறித்த கட்டடத் தொகுதியை உடைத்து, புதிய சந்தைத் தொகுதி ஒன்றை 2.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மணிப்பதற்கு, வவுனியா நகரசபை தீர்மானித்தது.

இது தொடர்பில், வவுனியா நகரசபையால் குறித்த வர்த்தகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுமிருந்தது.

இந்நிலையில், இந்தப் புதிய சந்தை அமைப்பதற்கு, ஆறு மாத கால அவகாசம் தேவை என்பதால், வியாபார செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக வியாபாரிகளுக்கு புதியதோர் இடம் வழங்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும், அவ்விடத்தில் வியாபாரிகளே கொட்டகைகளை அமைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில், அக்கொட்டகைகளை அமைப்பதற்கு, தம்மிடம் போதுமான பொருளாதார வசதிகள் இல்லாமையால், கொட்டகைகளை நகரசபை அமைத்துத் தரும் பட்சத்தில், தாம் அவ்விடத்துக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட முடியுமென, வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த சந்தை வியாபாரிகள், பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தானை நேரடியாக சென்று தமது நிலைமைகளை எடுத்துக்கூற முற்பட்ட நிலையில், இன்று (13) காலை பிரதி அமைச்சரே, குறித்த சந்தைத் தொகுதிக்கு நேரடியாக வந்து வியாபாரிகளின் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .