2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மின்னஞ்சல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நிதியியல் ரீதியான ஏமாற்று மோசடித் தகவல்களை வழங்கும் மின்னஞ்சல்கள் தொடர்பில், அவதானத்துடன் செயற்படுமாறு, பொது மக்களை மத்திய வங்கியின் வட பிராந்திய அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, மத்திய வங்கியின் வட பிராந்திய அலுவலகம், இன்று (14) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியானத் தகவல்களை வழங்கும் மின்னஞ்சல்கள், சமூக வலைத்தளச் செய்திகள் ஊடாக பரப்பப்படுகின்ற நிதியியல் ஏமாற்றுகள் தொடர்பில், பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் அண்மைக்கால வருத்தத்துக்குரிய முறைப்பாடுகள் மீது இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பகமான நிறுவனம் ஒன்றிலிருந்து அத்தகைய மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக ஏமாற்றி, பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக, இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகக் கட்டடத்தின் புகைப்படம், இலட்சிணை, இலங்கை மத்திய வங்கியின் மூத்த அலுவலர்களின் பெயர்கள் என்பன மோடிக்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பிராந்திய அவலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, cb.banklankaShasia.com, infoShcbsl-lk.com, customercareShcbsl-lk.com போன்ற போலியான மின்னஞ்சல் முகவரிகள் இச்செய்திகளை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ள பிராந்திய அலுவலகம், அலைபேசி இலக்கமொன்றின் மூலமாகவோ அல்லது பிரபல்யமான பன்னாட்டு வர்த்தக நாம ஊக்குவிப்புப் பிரசாரமொன்றின் மூலமாகவோ பெருமளவிலான வெளிநாட்டு நாணயப் பரிசொன்றை வெற்றிபெற்றுள்ளதாக குறிப்பிட்டு, பரிசைக் கோருவதற்காக, பணத்தொகையை வைப்புச் செய்யுமாறு, பொதுமக்கள் தூண்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அத்தகைய வெகுமதித் திட்டங்களுடன் இலங்கை மத்திய வங்கி எவ்விதத்திலும் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதனை மத்திய வங்கியானது பொதுமக்களுக்கு அறியத்தருதெனவும், பிராந்திய அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .