2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பத்திரிகை ஆசிரியர்களிடம் வாக்குமூலம்

எம். றொசாந்த்   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையான தனி ஈழத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவாமிக்கு அலங்காரம் செய்தமை தொடர்பான செய்தியை வெளியிட்ட யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மூன்று பத்திரிகைகளின் ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று அனுமதி கோரினர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் விண்ணப்பம் சிங்கள மொழியில் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த பதில் நீதிவான் கனகரட்ணம் கேசவன், யாழ்ப்பாண நீதிமன்ற மொழியான தமிழில் முன்வைக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 16ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திருவிழாவில் வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாதவிசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.  

அதுதொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றை இன்று தாக்கல் செய்தனர். வழக்கு பதில் நீதிவான் கனகரட்ணம் கேசவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

 எழுத்துமூல விண்ணப்பத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மன்றில் முன்வைத்தனர்.

“தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட தனி ஈழக் கோரிக்கையைக் குறிக்கும் வகையில் ஈழ வரைபடத்தை ஒத்த வகையில் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் சுவாமி அலங்கரிப்பட்டிருந்தார். 

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஊடகவியலாளர் ஒருவர், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பூசகர் ஆகியோரும் வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்த நிகழ்வு தொடர்பில் செய்தி வெளியிட்ட யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன், வலம்புரி மற்றும் தினக்குரல் ஆகியவற்றின் ஆசிரியர்களிடம் வாக்குமூலம் பெறப்படவேண்டும். அதற்கான அனுமதியை மன்று வழங்க வேண்டும்” என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விண்ணப்பம் செய்தனர்.

அவர்களால் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல விண்ணப்பம் சிங்கள மொழியில் அமைந்துள்ளதால், அதனை ஏற்கமறுத்த பதில் நீதிவான், தமிழ் மொழியில் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தினார். அத்துடன், வழக்கு வரும் நவம்பர் 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X