2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு மேலதிக பாதுகாப்பு வழங்க பொலிஸ் மறுப்பு: சரவணபவன் எம்.பி.

Menaka Mookandi   / 2011 ஜூலை 30 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உதயன் நாளேட்டின் பிரதம செய்தி ஆசிரியர் குகநாதன், இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து குறித்த பத்திரிகை காரியாலயத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை பொலிஸாரால் நிராகரிக்கப்பட்டுள்ளது என உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகை நிறுவனத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

குறித்த பத்திரிகை அலுவலகத்தின் பாதுகாப்புக்காக கடந்த 2006ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தற்போதும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே அதற்கு மேலதிகமாக பாதுகாப்பு வழங்க முடியாது என யாழ். பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலிருந்து வந்த உத்தியோகபூர்வ கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சரவணபவன் எம்.பி. கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 'உதயன் பத்திரிகை நிறுவனத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு வலியுறுத்தும் வகையில் யாழ். மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்கிரமரட்னவுடனான சந்திப்பொன்று இன்று பிற்பகல் 2.30 மணியளவில் யாழ். பொலிஸ் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, உதயன் பத்திரிகை நிறுவனத்துக்கும் அதன் ஊழியர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் இதனால் நிறுவனத்தின் பாதுகாப்பை அதிகரித்து ஊழியவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன். இதற்கு பதிலளித்த பிரதி பொலிஸ் மா அதிபர், இது விடயமான கலந்துரையாடி எனக்கு அறிவிப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், யாழ். பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் பத்மதேவாவினால் கைச்சாத்திட்ட கடிதமொன்று இன்று எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், குறித்த பத்திரிகை அலுவலகத்துக்கு ஏற்கனவே பாதுகாப்புக்காக இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருப்பதாகவும் நிறுவனத்தின் மீதோ அல்லது நிறுவன ஊழியர்கள் மீதோ ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து அவர்கள் கவனிப்பார்கள் என்றும் அதனால் மேலதிக பாதுகாப்புக்காக பொலிஸாரை நியமிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், உதயன் அலுவலகம் அமைந்துள்ள பிரதேசத்தினூடாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸார் நிறுவனத்தின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி நிறுவனத்திலுள்ள தகவல் பதிவேட்டில் தினமும் கைச்சாத்திடுவதற்கான உத்தரவு யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் பத்மதேவா கைச்சாத்திட்டுள்ள அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X