2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ் நாடாளுமன்ற ஆசனங்களைக் குறைப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கும்: ஆனந்தசங்கரி

Super User   / 2011 ஜூலை 31 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்ற முடிவானது நிலைமையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அனுப்பிய கடிதமொன்றில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
 
யாழ் தேர்தல் மாவட்டத்தின் 9 நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஆறாக குறைக்க தாங்கள் எடுத்த தீர்மானம் எனக்கு பெரும் ஆச்சரியத்தைத் தருகின்றது. இந்த விடயத்தில் மாறாட்டம் தேவையில்லை. யாழ் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவை இணைந்த யாழ் தேர்தல் மாவட்டத்தைக் குறிப்பிடுகின்றீகள் என்று நான் நம்புகின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி பிரிக்கப்படுவதற்கு முன்னர் யாழ் மாவட்டத்திற்கு இருந்த பிரதிநிதித்துவம் 11 ஆகும். ஒரு கட்டத்தில் வடக்கே சீரற்ற நிலைமை காரணமாக இரு ஆசனங்கள் குறைக்கப்பட்ட போது யாரும் அதைப் பெரிதுபடுத்தவில்லை.

தற்போது தாங்கள் 9இல் இருந்து ஆசனங்களை 6 ஆகக் குறைப்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 1948ம் ஆண்டு நாடு சுதந்திரமடைய முன்னோடியாக இலங்கை நாடாளுமன்றத்தின் முதல் தேர்தல் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற போது 95 ஆசனங்கள்; தேர்தல் தொகுதி ரீதியாகவும் 6  ஆசனங்கள் பிரதிநிதித்துவப்படாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவும் என இருந்த மொத்தம் 101 ஆசனங்களில் யாழ் மாவட்டத்திற்கு மட்டும் கிடைத்த ஆசனங்கள் 7 ஆகும்.

சட்டரீதியான சரி, பிழை ஒருபுறம் இருக்க, 101 பேர் இருந்த சபையில் 7 பேர் யாழ் மாவட்டத்திற்கு இருந்த நிலையில் 64 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே சபையில் 225 ஆசனங்களுக்கு 6 ஆசனங்கள் மட்டுமே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திற்கு கிடைக்க இருப்பது வெறும் கேலிக்கூத்தாக எனக்குத் தோன்றுகின்றது.

இந் நிலையை நோக்கும் போது ஏதோ ஒரு தப்பான கணக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பரிகாரம் தேட நல்ல சில சிபாரிசுகளை ஜனாதிபதிக்கு அளித்து நிலைமையை சீராக்க வேண்டியது உங்கள் கடமையாகும். அவ்வேளையில் பின்வரும் வி;டயங்களும் கவனத்திற்கு எடுக்கப்பட் வேண்டியவையாகும்:
 
1.   இடம் பெயர்ந்து தெற்கில் குடியேறியவர்கள் பலர் படிப்படியாக தமது வீடுகளுக்கு வந்து குடியேற இப்போதுதான் ஆரம்பித்துள்ளார்கள்.
 
2.   நீங்கள் நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ள புதிய வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்டபோது இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் வீடு திரும்பவில்லை.
 
3.   பயம் காரணமாகவும் போதிய வசதிகள் இன்மை காரணமாகவும் வீடுகள் மனிதர்கள் குடியேறி வாழ முடியாத நிலையில் உள்ளதாலும்  தம் வீடுகளுக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றார்கள். அனேக வீடுகள் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அகப்பட்டுள்ளதாலும் மேலும் வீடுகள் இராணுவத்தினர்; பலாத்காரமாக பிடித்து வைத்துள்ளமையினாலும் அனேகர் மீளக்குடியேறவில்லை.
 
4.   சொத்துக்கள் அனைத்தையும் இழந்தும் உயிர் உட்பட எதுவித நட்ட ஈடுகள் பெறாத மக்கள் வாழ வழியின்றி குடியேற முடியவில்லை.
 
5.   யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் புள்ளிவிபரம் இன்மையால் இவற்றுள் அடங்கும் வாக்காளர்களின் நிலைமை என்னவென்று தெரியாமை மற்றும் காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் நிலைமை என்னவென்று தெரியாமல் உள்ளமையால் வாக்காளர்களின் பதிவில் சரியான கணக்குச் சொல்ல முடியாமல் உள்ளது.
 
6.   வீட்டுத் தலைவர் தடுப்புக்காவலில் உள்ளமையால் குடும்பத்தவர் சொந்த வீட்டுக்கு போகமுடியாத நிலைமை.
 
7.   குடிசன மதிப்பீடு எடுத்துக்கொண்டிருக்கின்ற நிலைமையில் பழைய அரசியல் சாசனத்தில் இருந்தமை போன்று கணக்கெடுப்;பு முடிந்த பின் தொகுதி நிர்ணயக் குழு நியமிக்கப்பட்டு அக்குழு முடிவுகளை எடுக்கலாம்.
 
8.   எல்லாவற்றிற்கும் மேலாக தாங்கள் எடுக்க இருக்கின்ற நடவடிக்கை நாட்டில் நிலைமையை மேலும் மோசமடையச் செய்வதோடு இனப்பிரச்சனை தீர்வை பின் தள்ளி விடும்.
 
ஆகவே பூரணமான சகஜ நிலை ஏற்படும் வரைக்கும் முறையற்ற குடியேற்றங்கள் வாபஸ் பெறப்படும் வரைக்கும் தற்போது இருக்கும் நிலையை தக்கவைத்து, பொதுசன வாக்கெடுப்பினைத்; தொடர்ந்து உருவாக்கப்படும் தொகுதி நிர்ணயக்குழு தீர்மானிக்கும் வரை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை 225 ஆகவே இருக்குமாறு ஆலோசனையை அரசுக்கு வழங்கி இவ்விடயத்தில் முன்யோசனையோடு செயற்பட்டால் பாரிய விளைவுகளைத் தவிர்க்கலாம்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X