Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூழல் விழிப்புணர்வு, சூழற்கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக இயற்கை, பண்பாட்டு, மரபு வளப்பாதுகாப்பு மையம் இந்த ஆண்டு முதல் பசுமை அமைதி விருதுகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக சூழலியலாளரும் இயற்கை, பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழினம் இயற்கையோடு இயைந்த பண்பாட்டு வாழ்வியலைக் கொண்ட ஓர் இனம். போராட்டம் தீவிரம் பெற்ற மிக நெருக்கடியான காலகட்டங்களில் கூட இயற்கையை நண்பனாக நேசித்துச் சூழல் அழிவுகளை மட்டுப்படுத்திய ஓர் இனம். ஆனால், கண்ணை இமை காப்பது போலப் பாதுகாத்து வந்த நமது இயற்கைச் சூழலை, இன்று அபிவிருத்தியின் பெயராலும் உலகமயமாக்கலின் பெயராலும் வணிக முதலைகளிடம் காவு கொடுத்து வருகிறோம். நாமும், பன்னாட்டு நிறுவனங்களின் ஊக்குவிப்பால் நுகர்வுவெறி தலைக்கேறி அத்தனை வளங்களையும் அனுபவிக்கத் துடிக்கிறோம். இது, போருக்குப் பின்னரான இன்னுமொரு போராக இயற்கைச் சூழலின் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆக்கிரமிப்பை நிறுத்திச் சூழலுடன் ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தைச் செய்து கொண்டால் மாத்திரமே இயற்கையின் வனப்பையும் வளத்தையும் பசுமை குன்றாத வகையில் பாதுகாக்க முடியும். நம் முன்னோர் நம்மிடம் கடனாகத் தந்துவிட்டுப் போன இயற்கைச் செல்வங்களை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாகக் கையளிக்க முடியும். நாமும் வளமாக வாழ்ந்து நம் வருங்காலத் தலைமுறைகளையும் வளமாக வாழவைக்க முடியும்.
இவற்றைக் கருத்திற் கொண்டு, தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக இயற்கை, பண்பாட்டு மரபு வளப் பாதுகாப்பு மையம் இந்த ஆண்டு முதல் பசுமை அமைதி விருதுகளை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.
பசுமை அமைதி விருதுத் திட்டத்தின் முதற்படியாக, இவ்வருட இறுதியில் மாணவர்களிடையே சூழல் அறிவுப் போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது. முற்றிலும் பல்தேர்வு வினாக்களை மாத்திரம் கொண்ட இப்பரீட்சை கீழ்ப்பிரிவு, மேற்பிரிவு என இரண்டு பிரிவுகளாக இடம்பெறவுள்ளது. கீழ்ப்பிரிவில் தரம் 9,10,11 இல் பயிலும் மாணவர்களும், மேற்பிரிவில் தரம் 12, 13 இல் பயிலும் மாணவர்களும் தோற்ற முடியும். மேலும், பாடசாலை மாணவர்கள் அல்லாதோரும் இப்பரீட்சையில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இவர்களின் வயது மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் பிரிவுகள் பின்னர் தீர்மானிக்கப்படும்.
பரீட்சைக்கான பாடவிதானமாக அந்த அந்தப் பிரிவுகளுக்குரிய வகுப்புகளின் விஞ்ஞான பாட நூல்களில் இடம்பெற்றுள்ள சூழல் அலகுகளுடன், சுற்றுச் சூழல் கட்டுரைகளின் தொகுப்பான 'ஏழாவது ஊழி' நூலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏழாவது ஊழி நூலை நூலகங்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சையில் சித்தி அடையும் அனைவருக்கும் பசுமை அமைதி விருதுச் சான்றிதழும் சிறப்புச் சித்தி அடைபவர்களுக்குச் சான்றிதழோடு பெறுமதி வாய்ந்த பரிசுப் பொதியும் பசுமை அமைதி விருதும் வழங்கி மதிப்பளிக்கப்படும். தமிழ்மொழி மூலம் நடைபெறவுள்ள இந்தச் சூழல் அறிவுப் போட்டிப் பரீட்சையில் இலங்கைத் தீவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களும் கலந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களைக் கையளிப்பதற்கான கடைசித் திகதி 15-09௨011. மேலதிக விபரங்களை யாழ்ப்பாணம், திருநெல்வேலி கிழக்கு, பதிவாளர் ஒழுங்கையில் அமைந்துள்ள இயற்கை, பண்பாட்டு மரவு வளப் பாதுகாப்பு மையத்தின் தலைமைச் செயலகத்துடனோ அல்லது 0777969644 என்னும் செல்லிடத் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .