2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கையினை ஜனநாயக நாடு என்று சொல்வதில் எந்தவிதமான பொருத்தப்பாடும் இல்லை: கஜேந்திரகுமார்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

டில்ருக்ஷனின் கொலைக்கான காரணம் சரியாகவும் உண்மையாகவும் அறிந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று இலங்கை தன்னையொரு ஜனநாயக நாடு என கூறிக் கொள்கின்றது. சட்டத்தை மதித்து நடக்காத இலங்கையினை ஜனநாயக நாடு என்று சொல்வதில் எந்தவிதமான பொருத்தப்பாடுகளும் இல்லை. இத்தைய விடயங்களை தமிழர் தரப்பு சரியாக புரிந்துகொண்டு இதற்குரிய தீர்வை நோக்கி பயணிக்கவேண்டும். இவ்வாறு தமிழர் தரப்பு செயற்படாது போனால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காணப்படமாட்டாது என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.

வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து கோமா நிலையிலிருந்தபோது உயிரிழந்த தமிழ் அரசியல் கைதி டில்ருக்ஷனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

“தன்னுடைய இனத்திற்காக சேவை செய்யும் நோக்கத்தில் செயற்பட்ட காலப்பகுதியில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யப்பட்டிருந்தும் தன்னுடைய இனத்திற்கான விடுதலை நோக்கிச் செல்லவேண்டும் என்ற உறுதியான கொள்கையோடு டில்ருக்ஷன் செயற்பட்டார். டில்ருக்ஷனின் கொலைக்கான காரணம் சரியாகவும் உண்மையாகவும் அறிந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்று இலங்கை தன்னையொரு ஜனநாயக நாடு என கூறிக் கொள்கின்றது. சட்டத்தை மதித்து நடக்காத இலங்கையினை ஜனநாயக நாடு என்று சொல்வதில் எந்தவிதமான பொருத்தப்பாடுகளும் இல்லை.

இந்த நாட்டின் சட்டத்திற்கு அமைவாகவே அனைத்து விடயங்களும் இடம்பெறவேண்டும். தன்னுடைய விடுதலையினை வாதாடி எடுக்க தயாராக இருந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இதன் அர்த்தம் உண்மையாக இலங்கையில் ஜனநாயகம் இல்லை என்பதே.

காலத்திற்குக் காலம் இருந்த அத்தனை அரசாங்கங்களும் இவ்வாறான செயற்பாடுகளைத் தான் செய்து வந்திருக்கின்றன. வெலிக்கடையில் நடந்தபோது வேறு அரசாங்கம், வேறு கட்சி ஆட்சியிலிருந்தது. அதேபோலத்தான் காலத்திற்குக் காலம் தமிழினப் படுகொலைகளின்போது வேறு வேறு அரசாங்கங்களும், கட்சிகளுமே ஆட்சியிலிருந்தன.

எனவே, இந்தச் செயற்பாடு இன்றுள்ள இந்த அரசாங்கத்தின் இனவாதப்போக்கை மட்டும் காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக சிங்கள அரசாங்கங்களினது இனவாதப் போக்கையே காட்டிக் கொண்டிருக்கின்றது. இன்று நாம் டில்ருக்ஷனின் படுகொலையை கண்டித்து ஒரு கூட்டத்தை நடத்துவதால் பயனில்லை. அவற்றின் மூலம் இவ்வாறான படுகொலைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியினை எம்மால் நிச்சயமாக வைக்க முடியாது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை காணாவிட்டால் இனிவரப்போகும் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமாட்டோம்” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X