2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகளின் கொலை குட்டிமணி, தங்கத்துரை தொடக்கம் நிமலரூபன், டில்றுக்ஷன்வரை தொடர்கின்றது: சுரேஷ்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                     (எஸ்.கே.பிரசாத்)

சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் கொல்லப்படுவது குட்டிமணி, தங்கத்துரை தொடக்கம் நிமலரூபன், டில்றுக்ஷன்வரை நீண்டுசெல்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின்போது காயமடைந்து கோமா நிலையிலிருந்து உயிரிழந்த டில்ருக்ஷன் மரியதாஸின் இறுதிச்சடங்கு யாழ். பாசையூரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'அன்று  தொடக்கம் இன்றுவரை சிறைச்சாலைகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற படுகொலைகளுக்கு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.  கொல்லப்படுவது தமிழர்கள் என்ற காரணத்தால் இவ்வாறு பாரபட்சம் காட்டப்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை தமிழர்களினால் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.

இது அரசாங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு கொலை. வவுனியா சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்ட பின்னர் அநுராதபுரம் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கும் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நாட்டில் இறந்தவரின் உடலுக்கு மக்கள்  சுதந்திரமாக இறுதி அஞ்சலி செலுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் ஊடாக கறுப்புக்கொடிகள் கட்டக்கூடாது. வாத்தியங்கள் இசைக்கக்கூடாது என பல அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த மரணச்சடங்கை  நாங்கள் இங்கு நடத்திக்கொண்டிருக்கின்றோம். சாதாரண மரணச்சடங்கை நடத்துவதற்கு கூட அனுமதி பெறவேண்டிய நிலைமை இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X