2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வளலாயில் காணிகளை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி

Menaka Mookandi   / 2014 மே 18 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

உயர் பாதுகாப்பு வலயமான வலளாய் பகுதியிலுள்ள காணிகளை பொதுமக்கள் எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து பார்வையிடுவதற்கு இராணுவம் அனுமதியளித்துள்ளதாக வளலாய் மீள்குடியேற்ற குழுவின் செயலாளர் எஸ்.துரைரட்ணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) தெரிவித்தார்.

இதற்காக இராணுவம் 5 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் சென்று தங்களது காணிகளைப் பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

வளலாய் மேற்கில் இருந்து இடம்பெயந்து மீண்டும் மீள்குடியமர்வதற்கு விருப்பம் தெரிவித்து கோப்பாய் பிரதேச செயலகத்தில் பதிவு செய்த 224 பேரும், தங்கள் கிராம உத்தியோகத்தருடன் சென்று பார்வையிட முடியும் என அவர் தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (20) வளலாய் கடற்கரை, காங்கேசன்துறை வீதி இருமருங்கு, நீர்வாவிகேணி, பலாலி வீட்டுத்திட்ட கிழக்கு எல்லை ஆகிய பகுதிகளையும், புதன்கிழமை (21) வளலாய் வடமேற்கு, தில்லங்கலட்டி, பணுவில், அரசங்கலட்டி, வேணை, கொத்தாள், பாண்டியன், மண்திட்டி, ஓடை, பலாலி எல்லை வரையுள்ள பகுதிகளையும் பொதுமக்கள் பார்வையிடலாம். 

அத்துடன், வியாழக்கிழமை (22) வளலாய் மேற்கிலுள்ள கந்தாணர் வீதி, சாந்தை, கொச்சாட்டி, தாந்தபுலம், தொந்தாளை, பிரணையடி, பலாலி எல்லை வரையும், வெள்ளிக்கிழமை (23) புளியிட்டி, ஆவரசம்புலம், ஓட்டாப்புலம், குச்சம் பலாலி வரையிலும் பார்வையிடலாமென அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சனிக்கிழமை (24) மீள்குடியேற்றம் தொடர்பான பொதுவான கலந்துரையாடலொன்று வலளாய் ஜே - 284 கிராமஅலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், இதுவரையிலும் பதிவு செய்யாதவர்களும் தங்கள் கிராமஅலுவலருடன் தொடர்புகொள்ள முடியும். தங்களது காணிகளைப் பார்வையிட வரும் பொதுமக்கள் வீண் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு மீள்குடியேற்றத்திற்கான பதிவுகள் செய்த ஆவணங்களுடன் காலை 8 மணிக்குள் வருமாறு அவர் மேலும் கேட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .