2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறோம்; சுரேஸ் எம்.பி

Kanagaraj   / 2014 மே 18 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


உயிரிழந்த உறவுகளின் பிதிர்க்கடன்களை கூட நிறைவேற்ற முடியாதபடி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறோம். எங்கள் சகோதரர்கள் எங்களுக்காக போராடினார்கள். எங்களுக்காக மரணத்தை எய்தினார்கள். எமது எதிர்காலத்திற்காக தமது முழு வாழ்க்கையையுமே அர்ப்பணித்தார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றுகையில்:

உறவுகளை நினைவு கூற தடை
 
இன்று ஒரு மறக்க முடியாத நாள். ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றில் கூட. தமிழ் மக்கள் தங்கள் இழந்த உறவுகளை நினைத்துப்பார்க்க, அதற்காக ஒரு துளி கண்ணீர் விட, அதற்காக அஞ்சலி செலுத்த மறுத்திருக்கின்ற அரசின் கீழ் வாழக் கூடிய காலக்கட்டத்தில் நாம் எமது உறவுகளுக்கு ஏதோ ஒரு வகையில் அஞ்சலி செலுத்துவதற்காக கூடியிருக்கின்றோம்.
 
இந்துக்கள் இறந்தவர்களுக்காக செய்யும் பிதிர்கடனைக் கூட செய்யவிடாமல் கீரிமலைக்கு செல்லும் சகல வீதிகளும் இராணுவத்தால் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மூடப்பட்டுள்ளது.
 
அதே போன்று யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும் வீதிகளும் மூடப்பட்டுள்ளன. இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. யாரும் அங்கு போக முடியாது.
 
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு மக்கள் செல்ல முடியாத நிலையுள்ளது. ஆலயங்களில் இன்று திருவிழாக்கள் நடக்கக்கூடாதென்று இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
 
பல்கலைக் கழகம் மூடப்பட்டு பல்கலைக்கழத்தைச் சுற்றி இராணுவம் குவிக்கப்பட்டு கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆகவே அவ்வாறான மிகவும் மோசமான சூழலில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

வெற்றிக்களிப்பில் அரசாங்கம்

இன்று வெற்றிக்களிப்பில் மாத்தறையில் இலங்கை இராணுவமும், ஜனாதிபதியும் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். அந்த வெற்றி விழா கொண்டாடுவதற்காக ஒரு வார காலத்திற்கு மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
அவர்கள் அதனை ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் இங்கு கைதுகள் நடைபெறுகின்றன, நாங்கள் ஆலயங்களுக்கோ, தேவாலயங்களுக்கோ சென்று இறந்து போன எம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உறவுகளை இழந்தவர்கள் நாங்களே!


ஒருவர், இருவர் அல்ல ஏறத்தாழ இந்த யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளை இழந்திருக்கின்றோம். யுத்தத்தின் இறுதி நாட்களில் மட்டும் எழுபதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா கூறுகின்றது.
 
இலங்கை இராணுவம் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் ஈழத்தமிழர்களை கொத்துக் கொத்தாக கொலை செய்தார்கள் என்பதற்கான பல்வேறுபட்ட சாட்சியங்கள் இருக்கின்றன. இதனை விசாரிக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவெடுத்திருக்கின்றது.

சர்வதேச விசாரணை உண்டு


இம்மாத இறுதியில் அல்லது அடுத்தமாத முற்பகுதியில் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற இருக்கின்றது. எமது மக்களை, எமது இனத்தை கொத்துக் கொத்தாக கொலை செய்தனர். பாடசாலைகள், வைத்தியசாலைகள், வணக்கஸ்தளங்கள் அழிப்பட்டன. குழந்தைகள் உணவுக்காக வரிசையில் நின்ற போது குண்டுகள் போட்டு அழிக்கப்பட்டார்கள்.

இவையெல்லாம் ஒரு கண்ணியமான யுத்தப் பன்புகளல்ல, என்பது ஒரு சர்வதேச நெறிமுறை. ஆனால் இவையெல்லாம் இலங்கையில் நடந்தது. வன்னியில் நடந்தது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற இருக்கின்றது.

இந்த விசாரணையின் முடிவில்தான் எவ்வாறு தீர்ப்புகள் வெளிவரப் போகின்றது என்பது தெரியும். அந்த முடிவுகளின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் எவ்வாறு செயற்படப்போகின்றது.

வெளிநாட்டவர்கள் வருவதற்கு அரசாங்கம் தடை ஏற்படுத்துகின்றது


இந்த விசாரணைக்காக இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் வருவதை இலங்கை அரசாங்கம் தடை விதிக்கின்றது. அவர்களுக்கான விசா வழங்குவதற்கு மறுக்கிறது. அவர்கள் இங்கு வராவிட்டால் கூட வெளிநாடுகளில் இருந்து இந்த விசாரணையை நடத்தலாம்.

இராணுவத்தினர் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன


யுத்தத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட பல நூறு மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். ஏன் கொலைகளில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பாக பல்வேறுபட்ட ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறுப்பட்ட சாட்சியங்கள் இருக்கின்றன. அந்த அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற இருக்கின்றன. இந்த விசாரணைக்கான முடிவுகளை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுக்கின்ற பட்சத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேசத்தால் பல்வேறுபட்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும். இதனால் இலங்கை அரசாங்கம் மிகப் பெரிய அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.

எல்லாம் முடிந்துவிட்டதாக அரசாங்கம் நினைத்தது

பல இலட்சம் மக்களை இழந்திருக்கின்றோம். எமது மக்களை அழித்ததுடன் எல்லாம் முடிந்துவிட்டதாக மஹிந்த அரசாங்கம் நினைத்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து நிற்க முடியாதென நினைத்தது.

ஆனால் இன்று புலம்பெயர்ந்து வாழும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக் கூடிய அளவிற்கு. நிலைமையை மாற்றியிருக்கின்றார்கள்.
 
தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்காக, நீங்கள் இந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்காகத்தான் போராளிகள் போராடினார்கள்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நாங்கள் சிங்களம் கற்க நிர்ப்பந்திக்கப்பட்டோம், பல்கலைக்கழக அனுமதிகள் மறுக்கப்பட்டன, காணிகள் அபகரிக்கப்பட்டன. தற்போதும் கூட தமிழர் தாயகத்தில் பல்லாயிரம் ஏக்கர் நிலம் படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
 
இவையெல்லாம் நீண்ட காலத்திற்கு இப்படி நடக்க முடியாது. இவையெல்லாம் அந்த மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும். இங்கு இருக்கின்ற இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். வெளியேற்றப்படும். அவ்வாறான ஒரு சூழலை உருவாக்க வேண்டும். நிச்சயமாக இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக சர்வதேசம் சரியான ஒரு மனோநிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது.

அஞ்சத் தேவையில்லை

ஆகவே நாங்கள் தோற்றுப் போய் விட்டோம், அடிமைகளாகிவிட்டோம் என்று அஞ்சத் தேவையில்லை. நாங்கள் மீண்டும் தலைநிமிர்ந்து இந்த மண்ணில் வாழ வேண்டும்.

வரலாற்றும் தொன்மை கொண்ட இனம் தமிழ் இனம்

நாங்கள் இம்மண்ணின் சொந்தக்காரர்கள். பல்லாயிரக்கான ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்திருக்கின்றோம். எமது தமிழ் மொழியென்பது உலக மொழிகளில் மிகவும் பழமை வாய்ந்தது. ஆகவே இவ்வாறான மிகப் பெரிய வரலாற்றும் தொன்மை கொண்ட இனம் தமிழ் இனம்.

இவ்வாறான வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட மண்ணில் வாழ்ந்தவர்கள் நாங்கள். ஆகவே சுதந்திரமாகவும், உரிமையுடனும் வாழ்வதற்கு முழுத் தகுதி பெற்றவர்கள் நாங்கள்.

யாருக்கும் அடிபணியாமல் வாழக் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்

இந்த மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், யாருக்கும் அடிபணியாமல் வாழக் கூடிய அந்த சூழல் உருவாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அஞ்சலி நிகழ்வுகள்

இந்நிகழ்வில், போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளை இழந்த 150 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டதுடன், மதிய போசன நிகழ்வுடன் அஞ்சலி நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
 
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மற்றும் இறுதிப் போரில் உறவுகளை இழந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .