2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முள்ளிவாய்க்காலை நினைவு கூர த.தே.கூ ஏற்பாடு செய்யவில்லை: தம்பிராசா

Menaka Mookandi   / 2014 மே 21 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்யாத நிலையிலேயே தி.துவாரகேஸ்வரனும் (வடமாகாண சபை வேட்பாளர்) தானும் காரைநகர் மக்கள் சார்பில் கீரிமலையில் இறந்த உறவுகளுக்கான ஆத்மசாந்திப் பிராத்தனையையும் அன்னதானத்தையும் நடத்த முனைந்தோம் என அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூர் முடமாவடியிலுள்ள ஊடகவியலாளர் மையத்தில் செவ்வாய்கிழமை (20) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்,

கீரிமலை நகுலேஸ்வரத்தில் நானும் துவாரகேசனும் நின்ற வேளை, அங்கு வந்த காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர், ஆலய பிரதமகுரு முன்னிலையில் எம்முடன் கலந்துரையாடி இந்த ஆத்மசாந்திப் பிரார்த்தனையினை நிறுத்தும்படியும் வேறு ஒரு நாளில் இதனை ஏற்பாடு செய்யுமாறும் தெரிவித்தனர்.

இருந்தும், நாம் அவர்களுக்கு உண்மை நிலைமையை எடுத்துக்கூறினோம். அதனை எழுத்துமூல உறுதிமொழியாக கேட்ட அவர்களிடம், இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களோ அரசியல்வாதிகளோ பங்கேற்கமாட்டார்கள். பொதுமக்கள் மாத்திரமே பங்கேற்பார்கள் என்றும் குறிப்பிட்டு வழங்கினோம். அப்படி இருந்தும்கூட அடுத்த நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஏற்கனவே வட மாகாணத்தின் ஆளுநர், கடந்த காலத்தில் இத்தகைய நிகழ்வை நகுலேஸ்வரத்தில் நடத்தியுள்ளதாக ஆலய குருவினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் இது பிதிர்க்கடன் செலுத்துதல் மட்டும் தான் என வலியுறுத்திக் கூறிய நிலையிலேயே பொலிஸார் இந்நிகழ்வுக்கு அனுமதி வழங்கினர்.

இந்நிலையில், துவாரகேஸ்வரனின் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்திய பலர், இத்தகைய நிகழ்வை நடத்த வேண்டாம் என பல்வேறு அழுத்தங்களையும் கொடுத்தார்கள். எனினும்; இது பிதிர்க்கடன் செலுத்துதல் என்பதும்  இறந்த ஆன்மாக்களுக்கு அமைதி தேடும் செயற்பாடாகும் என்றும் இதனை யாரும் குழப்பதீர்கள் எனவும் அவர் கூறினார்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு சில ஊடகங்கள், பொலிஸாருக்கு நாம் கடிதம் கொடுத்த ஒரு சில நிமிடத்திலேயே எம்முடன் தொடர்புகொண்டு நாளைக்கு நிகழ்வுகள் நடைபெறமாட்டாது என அறிக்கை தருகின்றீர்களா? எனக் கேட்டார்கள்.

எனக்கும் துவாரகேஸ்வரனுக்கும் ஆலய குருவுக்கும் மட்டுமே தெரிந்த இந்த விடயம், உடனடியாக ஒரு சில ஊடகங்களுக்கு எவ்வாறு தெரிந்தது என்பது கேள்விக்குரிய விடயமாகும் என அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .