2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வெளிக்களப் பணிக்கு திரும்பினர்

Menaka Mookandi   / 2014 மே 28 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெளிக்களப் பணிப்பகிஷ;கரிப்பில் ஈடுபட்டு வந்த சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றி வந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று புதன்கிழமை (28) வெளிக்களப் பணிக்குச் செல்வதாக யாழ். மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத் தலைவர் கணேஸ்வரன் சதீஸ் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் யாழ்.மாவட்டச் செயலகத்தின் செவ்வாய்க்கிழமை (27) மாலை இடம்பெற்ற இரகசிய சந்திப்பின்போது வழங்கப்பட்ட உறுதிமொழியினையடுத்து இந்த முடிவினை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் பிரதேச சபைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கான காடர் (வேலை செய்வதற்கான அனுமதி) ஏற்படுத்தித் தருவதாக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால், நியமிக்கப்பட்ட 10பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் சுகாதார வைத்தியதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த வகையில்,  யாழ். மாவட்டத்தின் நல்லூர், வலி.தெற்கு, வலி.மேற்கு மற்றும் வலி.வடக்கு பிரதேச சபைகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையிலும் கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கான காடர் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையினை வடமாகாண சபை இந்த வருட இறுதிக்குள் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளார்.

அத்துடன், காடர் ஏற்படுத்தும் காலப்பகுதி வரை அவர்கள் பிரதேச சபைகளில் அலுவலகங்களில் கடமையாற்றவுள்ளதுடன், அவர்களுக்கான வேதனங்களை சுகாதரத் திணைக்களம் வழங்கவுள்ளதாக கணேஸ்வரன் சதீஸ் மேலும் தெரிவித்தார்.

வலி.வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிக்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாட்டினையடுத்து, பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்ற வேண்டும் எனக் கோரி சுகாதார வைத்திய அதிகாரிகளினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய பிரதேச சபைகளில் கடமையாற்றிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றப்பட்டனர். எனினும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை மீண்டும் பிரதேச சபைகளின் கீழ் பணியாற்ற அனுமதியளிக்கும்படி கடந்த 60 நாட்களாக வெளிக்களப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மேற்படி வெளிக்களப் பணிப்பகிஷ்கரிப்பினால் யாழ்.மாவட்டத்திலுள்ள சந்தைகள் மற்றும் இறைச்சிக்கடைகளில் சுகாதாரச் சீர்கேடு இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், குறித்த போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தங்கள் கடமைகளுக்குத் திரும்புகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .