2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பூநாறி மரத்தடி வாள்வெட்டு; ஒருவருக்கு விளக்கமறியல்; ஐவர் தலைமறைவு

Menaka Mookandi   / 2014 மே 30 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். பூநாறி மரத்தடியில் வைத்து இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பான புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியசட்கர் டி.எம்.திலகரட்ண இன்று வெள்ளிக்கிழமை (30) தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி வாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் இருவரும் தம்மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்களில் 6பேர் தொடர்பான பெயர் விபரங்களை வாக்குமூலமாகத் தந்தனர். அதன்படி புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில் கொக்குவிலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மற்றைய ஐவரும் தலைமறைவாகியுள்ளதாகவும் அது தொடர்பான புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, 'இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஆவாக் குழுவில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அது உண்மையா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த திலகரட்ண, 'குறித்த இருவரும் தங்கள் வாக்குமூலத்தில் ஆவாக் குழுவினைச் சேர்ந்தவர்களும் தங்கள் மீது வாள்வெட்டினை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஆவாக் குழுவினர் சம்பந்தப்பட்டனரா? என புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.காங்கேசன்துறை வீதி, பூநாறி மரத்தடிப் பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் கடந்த செவ்வாய்க்கிழமை (20) சரமாரியான வாள்வெட்டினை மேற்கொண்டது.

இதில் கொக்குவிலினைச் சேர்ந்தஇரு இளைஞர்கள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கோடாரிகளுடன் வந்த 10பேர் கொண்ட கும்பல் மஞ்சவனப் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த இந்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முனைந்துள்ளனர்.

எனினும், அவர்கள் தப்பித்து காங்கேசன்துறை வீதி வழியாக வந்துகொண்டிருந்த போது ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் பூநாறி மரத்தடியில் முச்சக்கரவண்டியினை இடைமறித்த அந்தக் கும்பல், முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் மீதும் சரமாரியான வாள் மற்றும் கோடாரி வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X