2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வடக்கு, கிழக்கில் இராணுவம் இருப்பதை விரும்பவில்லை: ஜெகன்

Kanagaraj   / 2014 ஜூன் 29 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கு. கிழக்குப் பகுதிகளில் இராணுவம் இருப்பதையும் இராணுவம் அதிகாரம் செலுத்துவதினையும் தாம் ஒருபோதும் விரும்பியதில்லையெனவும் அதனை நிறுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் நேற்று சனிக்கிழமை (28) தெரிவித்தார்.

சமுர்த்தித் திட்டத்தின் மூலம்; சங்கத்தானைப் பகுதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் பொருட்டு, கணேசர் சனசமூக நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

மக்களுக்கான அரசியல் தலைமைகள் சரியானதாக அமைந்தால்தான் அப்பகுதிக்காகன அபிவிருத்திகள் அனைத்தும் சரியான வகையில் முன்னெடுக்க முடியும். ஆனால் அவ்வாறானதொரு அரசியல் தலைமையை தமிழ் மக்கள் இன்றுவரை தெரிவு செய்யாது போனதால்தான் இன்று நாம் கண்டுவரும் அரசியல் தளம்பலுக்குக் காரணம்.

யாழ். மாவட்டத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திகளையும் மீளாய்வு செய்து குறைகளை நிவர்த்திசெய்வதற்காக, மக்களால் ஒழுங்கு செய்யப்படுகின்ற மக்கள் சந்திப்புக்களில் பங்குபற்றி வருகின்றோம்.

மக்களது வாழ்வியலில் அக்கறையுடன் இருக்கவேண்டிய ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளும் இன்று மக்களை பாராமுகமாக இருப்பதனால் எத்தனையோ பல அபிவிருத்திகள் பின் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உங்களது தேவைகளை பூர்த்திசெய்ய யார் தகுதியானவர்களோ அவர்களை உங்கள் பிரதிநிதிகளாக்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது.

எத்தனை அழிவுகள் வந்தபோதும் தமிழையும் தமிழ்மக்களையும் அவர்களது உணர்வுகளையும் கட்டிக்காத்து வருவது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தான். நாங்கள் அபிவிருத்தியையும் அரசியலையும் சமதட்டில் வைத்து நகர்வுகளை மேற்கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் அரசியல் பலம் எம்மிடம் போதியளவு இன்மையால் அரசியல் காய்நகர்த்தல்களை செய்ய முடியாதவர்களாக இருக்கின்றோம்.

அன்று எமக்கு அனைத்து அதிகாரங்களுடன் கூடிய தீர்வு கிடைக்கவிருந்தும் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் முன்னகர்வுகளில் ஏற்பட்ட தவறுகளால் பல சந்தர்ப்பங்களை இழந்துவிட்டோம்.

தூரநோக்குடன் சிந்திக்கக் கூடிய சக்தி மக்களிடம் என்று வருகின்றதோ அன்றுதான் தமிழர்களுக்கான நல்லதொரு அரசியல் தீர்வும் கிடைக்கும்.

உங்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினூடாகப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கிறேன். அடிப்படை வசதிகளின்றி இருக்கும் உங்களது வாழ்வாதாரங்களை உயர்த்துவதுதான் எமது இலக்காகும்.

தமிழ்த் தேசியம் மட்டும்பேசிக் கொண்டால் இன்று வளர்ந்துவரும் சமூகச் சீர்கேடான செயல்கள், பாரதூரமான விளைவுகளுக்கு மீண்டும் தமிழ்மக்களை கொண்டு சென்றுவிடும். யதார்த்தமான நிலைமைகளை புரிந்து மக்களை நல்வழிப் படுத்துவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

தொடர்ந்தும் போலித் தேசியம் பேசபவர்களை நம்பி அவர்களின் பின் செல்வீர்களானால் எதிர்காலத்தில் அரசியல்தீர்வுடன் அபிவிருத்தியும் இல்லாது போய்விடும் என அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஈ.பி.டி.பியின் தென்மராட்சி அமைப்பாளர் எஸ்.சாள்ஸ், சங்கத்தானைப் பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .