2025 ஜூலை 05, சனிக்கிழமை

அரசாங்கத்தை நம்பியே கணவரை ஒப்படைத்தேன்: சுபத்திரா

Kogilavani   / 2014 ஜூலை 06 , பி.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இந்த அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து எனது கணவனை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். அதனால், எனது கணவரை ஒப்படைத்தது போலத் திருப்பித் தரும்படி காணாமற்போன இராசையா இராத்தனன் என்பவரின் மனைவி சுபத்திரா ஞாயிற்றுக்கிழமை (06) சாட்சியமளித்தார்.

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவில் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கை சனிக்கிழமை (05) முதல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைவாக சனிக்கிழமை(5) 25 பேர் சாட்சியமளித்திருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (6) சாட்சியமளிக்கும் நடவடிக்கை தொடர்ந்து
இடம்பெற்று வருகின்றது.

இதன்போதே சுபத்திரா என்பவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

'கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் வைத்து எனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன்.
அதன்பின்னர் எனது கணவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அதேயாண்டு ஜுன் மாதம் 22 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்து நானும், எனது கணவரின் தந்தையும் சென்று பார்த்தோம்.

மறுநாள் (23ஆம் திகதி) காலையில் எனது மாமனார் கணவருக்குச் சாப்பாடு கொடுத்துவிட்டு வந்தார். அதன் பின்னர் எனது கணவர் வைத்தியசாலையில் இருந்து காணாமற்போயிருந்தார்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பினைச் சேர்ந்த இராசன் என்பவர்,  எனது கணவரை மீட்டுத் தருவதாகக்கூறி 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி எனது மாமனரிடம் வலுக்கட்டாயமாக 50000 ரூபாவை பெற்றுசென்றார்.

இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திலும் முறையிட்டிருந்தோம். இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு எப்ரல் மாதம் 10 ஆம் திகதி வவுனியா ஜோசப் முகாமில் எங்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

மேலும், 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 27 ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து எனது கணவருக்கு மரணச்சான்றிதழ் எடுக்கும்படியும் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாகவும் கேட்டனர். அதற்கு நான் மறுத்திருந்தேன்.

தொடர்ந்து 2013 செப்ரம்பர் மாதம் 12 ஆம் திகதி  வவுனியாவிலுள்ள சி.ஜ.டியினர் என்னையும் எனது மாமனாரையும் முழுமையான விசாரணைக்குட்படுத்தினர்.

எனக்கு 9 வயதிலும் 7 வயதிலும் இருமகன்கள் உண்டு. எனக்கு எனது கணவர் வேண்டும். அவரை உயிருடன் தாருங்கள்' என கண்ணீர் மல்கக் கேட்டார்.

You May Also Like

  Comments - 0

  • kereshan sumi Tuesday, 08 July 2014 03:14 AM

    நொ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .