2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

George   / 2014 செப்டெம்பர் 02 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரித்தானியாவில் வசிக்கும் நலன்விரும்பி ஒருவரின் நிதியுதவியில் தீவகப்பகுதியிலுள்ள பிரதேச வைத்தியசாலைகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு ஆகிய வைத்தியசாலைகளுக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை (02) வழங்கப்பட்டன.

இந்த உபகரணங்களை வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.என்.விந்தன் கனகரத்தினம், அ.பரஞ்சோதி, மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.

மேற்படி வைத்தியசாலைகளில் தற்பொழுது குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்து தரும்படியும் வைத்தியர்கள் வடமாகாண சபை உறுப்பினர்களிடம் கோரினார்கள். 

மேலும், அனலைதீவு வைத்தியசாலைக்கு அவசரமாக அம்புலன்ஸ் படகு ஒன்று தேவை என கோரிக்கை விடுத்தனர்.

அனலைதீவு மருத்துவமனையிலிருந்து அனலைதீவு துறைமுகத்திற்கு நோயாளிகளை கொண்டு வருவதற்கு ஒரு முச்சக்கரவண்டி கூட இல்லையெனவும், அத்துடன், நயினாதீவு வைத்தியசாலையில் இருந்த முச்சக்கரவண்டியும் பழுதடைந்ததால் மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை துறைமுகத்திற்கு கொண்டுவரமுடியாமல் அவஸ்தைப்படுவதாகவும் வைத்தியர்கள் கூறினார்கள். 

இவற்றுக்கு பதிலளித்த வடக்கு மாகாணசபை உறுப்பினரும் வடக்கு மாகாண சுகாதார குழு உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் குறிப்பிடுகையில், 'உங்கள் வைத்தியசாலையின் குறைபாடுகள், அவசர தேவைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படும்' என தெரிவித்ததோடு எதிர்வரும் காலங்களில் மாகாணசபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் இக்குறைகளை தீர்க்க முடியுமெனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .