2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கமலேந்திரனை பிணையிலெடுக்க எவருமில்லை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையெடுப்பதற்கு எவரும் வராத காரணத்தால் அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (02) உத்தரவிட்டது.

கமலேந்திரனை 2 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி அனுமதியளித்தார்.

வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிடவேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதியில்லாமல் எக்காரணம் கொண்டும் வெளிநாடு செல்ல முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

அத்துடன், இரண்டாவது சந்தேகநபரான நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் மனைவி அனிட்டாவை, 50 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும், தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதியளித்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பான சாட்சியங்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என அவ்விருவருக்கும் நீதிபதி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (02) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கமலேந்திரனையும் அனிட்டாவையும் எவரும் பிணையெடுப்பதற்கு முன்வரவில்லை. இதனையடுத்து, அவர்களின் தடுப்புக் காவலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி, அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த கொலை தொடர்பில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை, 2013ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

அத்துடன் றெக்ஷிசனின் மனைவி அனிட்ட மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், மூன்றாவது சந்தேகநபரான இளைஞனுக்கு பிணை மனுக்கோரி விண்ணப்பிக்காத நிலையில் அவருக்கு பிணை வழங்கவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .