2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கடத்தப்பட்ட குதிரைகள் கடற்படை முகாமிலிருந்து மீட்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


நெடுந்தீவில் இருந்து கடத்தி செல்லப்பட்டதாக பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்ட நான்கு குதிரைகளும் திருகோணமலை கடற்படைமுகாமுக்கு எடுத்து செல்லப்பட்டிருப்பதாக வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

நெடுந்தீவில் இருந்து படையினரால் குதிரைகள் கடத்தப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இருப்பினும், யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா, மற்றும் இராணுவத்தினர், தாங்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இதன் பின்னணி பற்றி தெரிந்துகொள்வதற்காக அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் நேற்று வியாழக்கிழமை, நெடுந்தீவுக்கு சென்றிருந்தார்.

நெடுந்தீவில் மேய்ச்சல் நிலங்களில் குதிரைகளை பார்வையிட்ட அமைச்சர், பிரதேச சபை அதிகாரிகள், கடற்படைமுகாமை சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் கருணாரத்ன மற்றும் பொதுமக்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் தொடர்ந்து கூறியதாவது, 

'கடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்ட நான்கு குதிரைகளும், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியுடன் கடற்படையினரால் திருகோணமலை கடற்படை முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

நெடுந்தீவில் வாழ்கின்ற போனி ரக குதிரைகள், போர்த்துக்கேயர்களால் கொண்டுவரப்பட்டவை. எனினும், பெருநிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட நெடுந்தீவில் பன்னெடுங்காலம் தனிமைப்படுத்தப்பட்டு அகஇனக்கலப்பில் ஈடுபட்டு வந்ததன் காரணமாக வடக்குக்கே உரித்தான தனித்துவமான ஒரு ரகமாகவும், வடக்கின் மரபுரிமைகளில் ஒன்றாககவும் இன்று இந்த குதிரைகள் மாறி உள்ளன.

எனினும், ஏறத்தாழ 500 குதிரைகள் மட்டுமே வாழ்வதால் இவற்றை உரியமுறையில் பாதுகாக்க தவறினால் விரைவிலேயே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. இதனை பலரும் சுட்டிக்காட்டியதன் காரணமாக, இலங்கை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், நெடுந்தீவில் குதிரைகளுக்கு 537 ஹெக்டெயர் பரப்பளவில் சரணாலயம் ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது.

இதற்கான அனுமதிகோரி எமது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், வடமாகாண காணி ஆணையாளர் கோரிக்கை கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் ஒருபுறம் குதிரைகளை பாதுகாப்பதற்காக சரணாலயத்துக்கு அனுமதியைக் கோரிவிட்டு இன்னொருபுறம் கடற்படையினர் குதிரைகளை பிடித்து செல்வதற்கு அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடனது.

இது கண்டிக்கத்தக்கது. திருகோணமலை கடற்படைமுகாமில் குதிரை ஒன்று தனிமையில் வாடுவதாகவும் அதற்கு துணையாகவே நெடுந்தீவிலிருந்து குதிரைகள் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தனது மேலதிகாரிகளின் வேண்டுதலின் பேரில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதியுடன்  தாம் இதற்கு அனுமதித்ததாகவும் நெடுந்தீவு கடற்படைமுகாம் அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

தவறான முன்னுதாரணமாக இந்த சம்பவம் அமைந்துவிடக்கூடாது என்பதால் எடுத்துச் சென்ற குதிரைகளை, மீளவும் நெடுந்தீவிலேயே கொண்டுவந்து விடுமாறு திருகோணமலை கடற்படை உயர் அதிகாரிக்கு உத்தியோகபூர்;வமாக விரைவில் அறிவிக்கவுள்ளோம்.

கடற்படையினர் தங்களுக்கு குதிரைகள் தேவையென்று கருதினால், இலங்கை காவல்துறையில் ஒரு பிரிவாகவுள்ள குதிரைப்படைப்பிரிவில் இருந்து இளைப்பாறும் குதிரைகளை பெற்றுக்கொள்ளலாம்' என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .