2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் எதிர்ப்பால் நிலஅளவை பணி கைவிடப்பட்டது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கடற்படை முகாம் அமைப்பதற்காக மாதகல் கோணாவளை  (ஜே - 150) பகுதியிலுள்ள 4 ஏக்கர் காணிகளை பொலிஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையொன்று உருவாகியது.

மக்களின் கடும் எதிர்ப்பால் நிலஅளவையாளர்கள் அளவிடும் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

மாதகல், கீரிமலை, சேந்தான்குளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் கடற்படை முகாம் அமைக்கும் நோக்கில் பொலிஸ் பாதுகாப்புடன் காணி அளவீடு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்தின், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், உறுப்பினர்கள் கந்தை சர்வேஸ்வரன், பாலச்சந்திரன் கஜதீபன் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் பொதுமக்களுடன் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர்.

கோணாவளை பகுதிக்கு நிளஅளவையாளர்கள் காணி அளவீடு செய்வதற்காக வருகை தந்திருந்த போது, பொதுமக்கள் நிலஅளவையாளர்களது நிலஅளவை உபகரணங்கள் அடங்கிய வாகனத்தை சுற்றிவளைத்து நிலஅளவை மேற்கொள்வதை தடுத்தனர்.

இதனையடுத்து, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியது. அவ்விடத்தில் 100 இற்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

பொதுமக்களுக்கு சொந்தமான மேற்படி காணியானது இராஜராஜேஸ்வரி கிராமிய மீனவ சங்கத்திற்கு நன்கொடையாக பொதுமக்களால் வழங்கப்பட்ட காணியாகும். அக்காணியில் மீன்வாடியொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், 43 மீனவர்களின் படகுகள் அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காணிகள் சுவீகரிக்கப்பட்டால் தங்களின் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்படையும் என பொதுமக்கள் கூறினார்கள்.

இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் கருத்துக் கூறுகையில்,

நிலஅளவை மேற்கொள்ளும் நிலஅளவையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நிலஅளவையாளர் திணைக்களத்தினால் தங்களிடம் கோரப்பட்டதாகவும், அதற்கிணங்க நிலஅளவையாளர்களின் பாதுகாப்புக்காக தாங்கள் அங்கு சென்றதாக கூறினார்கள்.

அத்துடன், அரச அதிகாரிகள் அவர்களது சொத்துக்களை சேதம் விளைவிப்பதை தடுக்கும் பொருட்டே தாங்கள் பாதுகாப்பிற்கு சென்றதாக கூறினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .