2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாணவி கொலைச் சந்தேகநபர்களுக்கு டீ.என்.ஏ பரிசோதனை

Menaka Mookandi   / 2015 மே 21 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித ஏ ஜெயசிங்க தெரிவித்தார்.

யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கூறிய பிரதி பொலிஸ் மா அதிபர், 'மாணவியின் படுகொலைச் சம்பவத்துடன் முதல் மூன்று சந்தேகநபர்களும் தொடர்ந்து ஐந்து சந்தேகநபர்களும் வெள்ளவத்தையில் சுவிஸ் நாட்டுச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். மாணவியின் உடல் கூற்றும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது” என்றார்.  

அத்துடன், சந்தேகநபர்கள் அனைவரும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பரிசோதனையில் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்படும் எவரும் தப்ப முடியாது. அதுவரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். நீதிமன்றமும் பொலிஸாரும் நீதியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்வது, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவது, விசாரணை செய்வது என்பன பொலிஸாரின் பணி. அதனை பொலிஸார் செய்து வருகின்றனர். யாரும் சட்டத்தை கையில் எடுத்து சட்டத்துக்கு முரணாக செயற்பட்டால் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

பொலிஸார் புலனாய்வு செய்து சாட்சியங்களை பதிவு செய்வதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். போராட்டங்களை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைவருக்கும் அனுமதியுண்டு. ஆனால் போராட்டங்களில் வேண்டத்தகாத முறையில் நடந்துகொள்ள முடியாது.

நேற்று நடந்த சம்பவத்தில் அதிகளவான பொலிஸாரைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தியிருக்க முடியும். அதிகளவான பொலிஸாரை பயன்படுத்தினால் தமிழர் உரிமை பறிக்கப்படுகின்றது என்ற கோஷங்கள் எழுந்திருக்கும். அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் தவறாக நடந்துள்ளனர். அது ஏற்றுக்கொள்ள முடியாது. உரிமையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

கொலைச் சம்பவம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் வியாழக்கிழமை (21) முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸ் புலனாய்வு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இச்சம்பவத்தை விசாரணை செய்ய கொழும்பிலுள்ள புலனாய்வாய்வு பிரிவையும் பொலிஸ்மா அதிபர் ஏற்பாடு செய்துள்ளார் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • janakulan.k Thursday, 21 May 2015 10:14 PM

    Eppadiyavathu thukku thandanai niraivetra vendum....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .