Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 15 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்சி மாற்றத்துடன் அரசாங்கம் அறிவித்திருந்த நூறு நாள் வேலைத்திட்டம், தமிழ் மக்களின் கைகளுக்கு எட்டாத கானல் நீராகிப் போனதற்கு யார் காரணம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 09.06.15 அன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நூறு நாள் வேலைத்திட்ட விவாதம் குறித்து ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி கொண்டிருக்கும் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில்,
'வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைமைகளைத் தவிர, அரசுடன் இணைந்திருக்கும் ஏனைய அரசியல் தலைமைகள் நாட்டின் ஏனைய பாகங்களில் நூறு நாள் வேலைத்திட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி, தத்தமது மக்களுக்கான சேவைகளை வழங்கி, அவர்களது வாழ்வில் மேலும் மகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் அமைச்சரவை அதிகாரத்தை விடவும் உயர் அதிகாரமான தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகித்திருந்தும், நூறு நாள் வேலைத்திட்டத்தையோ அதனைத் தொடரும் அரசின் வேலைத்திட்டங்களையோ தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைக்காகப் பயன்படுத்தவுமில்லை. எமது மக்களுக்கு நம்பிக்கையையோ, மகிழ்ச்;சியையோ கொடுத்திருக்கவுமில்லை.
புதிய அரசாங்கத்தை தாமே உருவாக்கிய நல்லாட்சி அரசு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்பட்டம் அடிக்கிறது. ஆனாலும், அவர்கள் கூறும் நல்லாட்சியைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளையோ அன்றி, அரசியல் உரிமைகளையோ பெற்றுக்கொடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபடியும் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்திருக்கிறது.
கடந்த காலங்களிலும் இது போன்ற வாய்ப்புக்களை வரலாறு, தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளின் கைகளில் தந்திருந்தது. ஆனாலும், போலி உணர்ச்சி வார்த்தைகளால் தமிழ் மக்களின் நரம்புகளை சூடேற்றி, அரசியல் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்ட சுய இலாப தமிழ் அரசியல் தலைமைகள் தமது பொறுப்பற்றத் தன்மைகளால் கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்தையும் சரிவரப் பயன்படுத்தத் தவறியிருந்தன.
தமிழ் பேசும் மக்களினதும் அனைத்து விடுதலை அமைப்புகளினதும் தியாகங்களினால் உருவாக்கப்பட்டதே இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13ஆவது திருத்தச்சட்டம். அதன் பிரகாரம் உருவான மாகாண சபை அதிகாரங்களை தென்னிலங்கை மக்கள் சரிவர அனுபவித்து வரும்போது, அதற்கு உரிமை கொண்டாட வேண்டிய தமிழ் பேசும் மக்கள் மட்டும்
பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைமைகளால், மாகாண சபை அதிகாரங்களை அனுபவிக்க முடியாத அவலத்தில் இன்னமும் வாழ்கின்றார்கள். இன்றும் பேரம் பேசும் அரசியல் பலத்தைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச அதிகாரத்தில் உள்ள ஒரு சில தமிழ்ப் பிரதிநிதிகளும் எமது மக்களுக்காக எதைச் சாதித்திருக்கிறார்கள்?
எமது மக்களின் சொந்த நிலங்களை விடுவித்து, அவற்றில் மீளக்குடியேற்றங்களைச் செய்தார்களா? சிறையில் வாடும் எமது அப்பாவி உறவுகளை மீட்டார்களா? காணாமற்போன எமது உறவுகளைக் கண்டறிய நடவடிக்கை எடுத்தார்களா? எமது வரலாற்று வாழ்விடங்களைத் தூக்கி நிறுத்தும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தார்களா? தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அறிகுறிகளையேனும் வெளிப்படுத்தினார்களா?
19ஆவது திருத்தச்சட்ட விவாதத்தின்போது, அதில் இணைக்கப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்தும் நாம் நாடாளுமன்றத்தில் எமது மக்களின் சார்பாகக் குரல் கொடுத்ததுடன், முன்மொழிவுகளையும் சம்ர்ப்பித்திருந்தோம். ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைக்கு மேலும் அதிகாரங்களைச் சேர்ப்பது குறித்தோ, சிறுபான்மையினரின் நியாயமான அரசியல் உரிமைகள் குறித்தோ இவ்விவாதத்தின்போது எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவுமில்லை திருத்த முன்மொழிவுகள் எதனையும் சமர்ப்பிக்கவும் இல்லை.
அதுபோலவே நூறு நாட்கள் வேலைத்திட்டமும் அதன் பின்னரான அரசின் தொடர் வேலைத்திட்டங்களும் தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாத கானல் நீராகத் தொலைந்து போய்க்கொண்டிருக்கின்றது. நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் எமது மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான பயனுள்ள திட்டங்கள் அடங்கியிருந்தன. அதேபோன்று அதன் பின்னரான அரசின் வேலைத்திட்டங்களையும் எமது மக்களுக்குப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.
அதை தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாத துயர நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மத்திய அரசிலும் மாகாண அரசிலும் அதிகாரத்தில் இருந்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே....
நாம் அரசியல் அதிகாரங்கள் கொண்டிருந்த நிலையில், எமது பலத்திற்கு ஏற்ற வகையில் எமது மக்களினதும் எமது வரலாற்று வாழ்விடங்களினதும் நலன் கருதி அடிப்படைத் தேவைகள் முதல் அபிவிருத்தி, மக்களின் சொந்த நிலங்களை மீட்டெடுத்தல், மீள்குடியேற்றம், வீடமைப்பு, கல்வி, சுகாதார வசதிகள் உட்பட அரசியலுரிமை வரை பல்வேறு பணிகளை முன்னெடுத்து வந்துள்ளோம். இதனை எமது மக்கள் நன்கறிவார்கள்.
இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீராப்பிரச்சினையாக்கி அதில் தமது சொந்த சலுகைகளையும் அடுத்த தேர்தல் வெற்றிகளையும் அனுபவிப்பதே தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கபட நாடகம்' என்றும் தெரிவித்துள்ளார்.
24 minute ago
31 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
36 minute ago
41 minute ago