2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொலை வழக்கில் பிணையில் சென்றவர் நீதிமன்ற தாக்குதல் வழக்கில் கைது

Sudharshini   / 2015 ஜூன் 27 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

கோப்பாய் பிரதேசத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு இரத்தினம் மணிவண்ணன் என்பவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு பிணையில் சென்ற நபர், யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவரது பிணையை இரத்து செய்வது தொடர்பான விசாரணையை ஆரம்பிப்பதற்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

குறித்த கொலை வழக்கு தவணை கடந்த 23ஆம் திகதி விசாரணைக்கு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளபட்டபோது சந்தேக நபர் மன்றில் ஆஜராகவில்லை. இந்நிலையில் சந்தேக நபர் யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியை தாக்கிய வழக்கில் நீதவான் நீதிமன்றத்தில் 10 ஆம் சந்தேக நபராக பெயரிடப்பட்டு சிறையில் உள்ளதாக மன்றினால் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சந்தேக நபர் கொலை வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்படும் போது வழக்கு முடியும் வரை நன்னடத்தையுடன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் விடுவிக்கபட்டிருந்தார். தற்போது கடந்த மே மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற நீதிமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகி உள்ளமை மேல் நீதிமன்றத்தின் பிணை காலத்தில் குற்றம் புரிந்துள்ளமையாகும்.

அதிலும் விசேடமாக மேல் நீதிமன்றத்தில் உள்ள கொலை வழக்கில் பிணை வழங்கப்பட்டு அதே நீதிமன்ற கட்டடத்துக்கு கல்வீசினார் என்பது பிணையை மீறிய செயலாகும்.

எனவே, பிணை இரத்து செய்ய எதிர்வரும்; யூலை மாதம் 27 ஆம் திகதி விசாரணையினை ஆரம்பிக்க நீதிமன்று தீர்மானித்துள்ளது. ஆகையால் அன்றைய தினம் சந்தேக நபரை மன்றில் ஆஜர்படுத்துமாறு அனுராதபுரம் சிறை அத்தியட்சகருக்கு மன்றினால் பணிப்புரை வழங்கப்பட்டது.
 

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .