2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வவுனியா அரச அதிபர் விவகாரம்: விசாரணைக்கு குழு அமைப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 24 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண சபை உறுப்பினர்களை வவுனியா அரசாங்க அதிபர் அவமதித்த சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என குறித்த அமைச்சினால் சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 32ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை கட்டடத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்றது.  அதன்போதே இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின்  சிறப்புரிமையினை மீறினார் என்ற குற்றச்சாட்டு வவுனியா அரச அதிபர் மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை இடமாற்றம் செய்யவேண்டுமென்று அவையில் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டும் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கப்படவில்லை.

இதனைக் கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கடந்த 31 ஆவது அமர்வில் உறுப்பினர்கள் அவைக்கதவுகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவைத்தலைவர் கூறியதற்கு இணங்க அவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாகாணசபை  அமர்வு  வியாழக்கிழமை (23) இடம்பெற்றது. அதன்போது நடவடிக்கை எடுப்பதாக அவைத்தலைவர் உறுதியளித்தமைக்கு இணங்க தன்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

குறித்த விடயம் தொடர்பில்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, த.தே.கூ தலைவர் இரா.சம்பந்தன் மற்றும்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ம.சுமந்திரன்  ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டது. 

அத்துடன்  உள்நாட்டு அலுவல்கள்  அமைச்சர்  ஜோசப் மைக்கல் பெரேராவுடன்  நேரடியாகவும் பேசியிருந்தேன். அதன்போது  ஒழுக்காற்று நடவடிக்கை மூலமே ஒரு உயர் அதிகாரியின் இடமாற்றத்தை செய்ய முடியும்  என்பதாலும்  இதனை விசாரிப்பதற்கு விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். 

அவர்களிடம்  உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆற்றுப்படுத்துவதாகவும் என்னிடம்  தெரிவித்திருந்தார்.  அத்துடன் த.தே.கூ தலைவரும்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு கடிதம்  அனுப்பியிருந்தார். அதற்கான பதிலிலும்  ஒழுக்காற்றுகுழு நியமிக்கப்பட்டமை தொடர்பிலும்  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  தேர்தல் காலம் என்பதால், வவுனியா அரச அதிபர், தெரிவத்தாட்சி அலுவலகராக உள்ளமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன்  தேர்தல் ஆணையாளரிடம் குற்றச்சாட்டு குறித்து தெரிவித்துள்ளார். அதற்கமைய தேர்தல் காலத்தின்போது மாற்றீடான ஒருவரை வவுனியாவுக்கு நியமிப்பதாகவும்  உறுதியளித்துள்ளார் என்றும் குறித்த விடயம்  தற்போது விசாரணையில் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .