2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஒருவர் கொலை; இருவருக்கு மரண தண்டனை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கதெனிய பிரதேசத்தில் நபரொருவரைக் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை குற்றவாளிகளாக இனங்கண்ட சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரணராஜா, நேற்று செவ்வாய்க்கிழமை (01) அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

முன் பகை காரணமாக  கடந்த 1999ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்தில் சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பங்கதெனிய, வெஹெரகெலே விகாரை வீதியில் வைத்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த தெஹிவத்தகே அஜித் சாந்த குமார என்பரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

கொலை செய்யப்பட்டவரும் இம்மூவரும் பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த இரு கிராமங்களில் வசித்து வந்துள்ளனர்.

அவர்களுக்குள் சில காலமாக மனக்குரோதம் நிலவி வந்துள்ளதாகவும் இதன் காரணமாக அவர்களிடையே அடிக்கடி சண்டைகள் இடம்பெற்று வந்துள்ளதாகவும் சாட்டியங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சம்பவ தினம் கொலை செய்யப்பட்ட தனது நண்பருடன் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை எதிரே குற்றம் சுமத்தப்பட்ட மூவரும் மோட்டார் சைக்கிளில் வந்ததைக் கண்டு ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்ற அச்சத்தில் தாம் திரும்பித் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், தம்மை அம்மூவரும் துரத்திப் பிடித்துக் கொண்டதுடன், கொலை செய்யப்பட்டவரை இருவர் பலமாகப் பிடித்துக் கொண்டதோடு, மற்றையவர் அவரின் நெஞ்சின் மீது அவர் வைத்திருந்த கூரிய கத்தியால் பலமாகக் குத்தியதாகவும், இதனால் கொலை செய்யப்பட்டவர் நிலத்தில் வீழ்ந்ததாகவும் நீதிமன்றத்தில் சாட்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டது. 

இவ்வாறு கத்தியால் குத்திய குற்றம் சுமத்தப்பட்ட மூவரும் தாம் வந்த மோட்டார் சைக்கிளிலேயே ஏறி பள்ளம பிரதேசத்தை நோக்கி தப்பிச் சென்றதாகவும், அவர்களிடம் அகப்படாமல் தான் தென்னை மரத்தில் ஏறி நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெஹிவத்தகே பிரேமசரி என்பவரின் சாட்யில் மேலும் தெரிவிக்கப்பட்டது. 

விசாரணை முடிவில் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் கூறுவதற்கு ஏதும் உண்டா? என நீதிபதியால் வினவப்பட்ட போது தாம் இந்தக் கொலையைச் செய்யவில்லை எனவும், தமக்கு மன்னிப்பு வழங்குமாறும் அவர்கள் கோரி நின்றனர்.  

இதனையடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தி அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். 

இவ்வழக்குடன் தொடர்புடைய மற்றையவர் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் விபத்தொன்றில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X