2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கூட்டுறவே நாட்டுயர்வு; கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 07:31 - 1     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
 
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களினால் நிர்வகிக்கப்படும் கூட்டுறவு வங்கிகளில் முஸ்லிம்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் ஷரீஆ அடிப்படையிலான வட்டியில்லா கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். 

இந்த வங்கிகளில் முஸ்லிம்கள் அதிக ஆர்வம் காட்டாமைக்கு பிரதான காரணம் வட்டியாகும். எனவே, வட்டியில்லாத கொடுக்கல் வாங்கல்கள்களை ஆரம்பிப்பதன் ஊடாக முஸ்லிம்களின் ஈடுபாட்டை இவ்வங்கிகளில் அதிகரிக்கச் செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன் என வர்த்தக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.  

மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்த அமைச்சர், அங்கு கூட்டுறவு சங்கத்தைப் பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.எச்.எம். ஹாறூன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 

இன ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பிரதான மையப் பொருளாகக் கொண்டு ஆட்சி நடத்தி வரும் தேசிய அரசாங்கத்தில், இனவாதிகளின் நோக்கம் ஒருபோதும் பலிக்காது. இலங்கையின் அரசியல் வரலாற்றிலே எதிரும் புதிருமாக இருந்த இரு பெரும் கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்று சேர்ந்து இந்த ஆட்சியை நடத்துவதானது ஒற்றுமைக்கு முன்னுதாரணமான விடயமாகும்.

'கூட்டுறவே நாட்டுயர்வு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற பழமொழிக்கு ஒப்ப நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். 

அனைத்து சமூகங்களின் பங்களிப்பும்கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கு பிரதானமானது. அந்த வகையில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து பணியாற்றினால் கூட்டுறவுச் சங்கங்களை மேலும் விருத்தி செய்யலாம்.

கூட்டுறவுத் துறையில் கடந்த காலங்களில் நிலவிய ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாமலாக்கி இதனை புனிதமான ஒரு துறையாக மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஒரு துறையாக, நியாயமான விலையில் பொருட்களை வாங்குவதற்குரிய ஒரு துறையாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டங்கள் எம்மிடமுண்டு. இலங்கையிலுள்ள அநேகமான கூட்டுறவுச் சங்கங்கள் மாகாண சபையின் கீழ் வருவதனால், எனது அமைச்சின் கீழ் அவைகளுக்கு நேரடியாக உதவ முடியாத சிக்கல்கள் இருக்கின்றன. 

எனினும், முடிந்தவரையில் அவற்றுக்கு என்னாலான பங்களிப்பை நல்குவேன். மதுரங்குளியில் இயங்காமல் இருக்கும் ஆறு கூட்டுறவு வங்கிகளை மீண்டும் செயற்பட விரைவில் நடவடிக்கை எடுப்பேன்.

கூட்டுறவுத் துறையில் புதிய கடன் திட்டங்களை உருவாக்கி மக்களுக்கு உதவ இருக்கின்றோம். எதிர்காலத்திலே இந்தத் துறையில் மறுமலர்ச்சி ஏற்படக்கூடிய வகையில் புதிய செயலணியை உருவாக்கியுள்ளோம். அந்த செயலணியில் துறை சார்ந்த நிபுணர்கள் பலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் நட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவுத் துறையினை இலாபம் ஈட்டும் துறையாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்போம் என்றார். 


You May Also Like

  Comments - 1

  • kannan Sunday, 24 September 2017 01:01 AM

    கூட்டுறவில்அரசியல்.கட்சிகள்இல்லாத.இடமாகஇருக்கவேண்டும்.

    Reply : 0       2


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X