2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக திருமணம் செய்ய முயன்ற இளம் ஜோடி கைது

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தித்த ஒரு வாரத்திலேயே, திருமணம் செய்து கொள்வதற்காக, வீட்டை விட்டு ஓடி வந்த இளம் ஜோடி​யை, சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 

சிலாபம், தெதுறு ஓயாவுக்கு அருகில் வைத்து, நேற்றிரவு சிலாபம் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால், இந்தக் காதல் ஜோடி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், வேறு கடமையொன்றின் நிமித்தம், ஜீப் வண்டியில் புத்தளம் வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியில், மோட்டார் சைக்கிளொன்று வந்துள்ளது. 

அந்த மோட்டார் சைக்கிளில் இளைஞனுடன், சிறுமியொருவர் பயணிப்பதை ஊகித்துக்கொண்ட பதில் பொறுப்பதிகாரி, மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை செய்த போது, தாம் காதலர்கள் என்றும், தாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், தமது திருமணத்துக்குப் பெற்றோர் எதிர்ப்பைக் காட்டியதால், வீட்டுக்குத் தெரியாமல் புத்தளம் பிரதேசத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று, மறுநாள் திருமணம் செய்து கொள்வதற்காகச் செல்கின்றோம் என அவ்விருவரும், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியிடம் அடையாள அட்டையும் இருக்காத நிலையில், அவர்கள் இருவரும் சிலாபம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி, மாதம்பை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் 21 வயதுடைய அவளது காதலன், சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் ஒரு வாரத்துக்கு முன்னர் இவ்விருவரும் வீதியில் வைத்துச் சந்தித்துக் கொண்டு, அச்சிறுமிக்கு குறித்த இளைஞர் தனது அலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளதாகவும், அதனூடாக கதைத்துக் கொண்ட இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு விரும்பிய போதிலும், அதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பைக் காட்டியதால், வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்த போதே, இவ்வாறு பொலிஸாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளரென, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டப்படி திருமணம் செய்து கொள்வதற்கான வயதைச் சிறுமி எட்டாத காரணத்தால், அவளது பெற்றோரை வரவழைத்த பொலிஸார், சிறுமியை, பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளதோடு, சிறுமி திருமணம் செய்து கொள்ளும் வயதை அடைந்ததன் பின்னர் அவளைத் திருமணம் செய்து கொள்ளுமாறு, காதலனுக்கும் எச்சரிக்கை விடுத்து, அவரையும் விடுவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X